/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆட்டோவில் அதிகப்படியான மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை
/
ஆட்டோவில் அதிகப்படியான மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை
ஆட்டோவில் அதிகப்படியான மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை
ஆட்டோவில் அதிகப்படியான மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை
ADDED : ஆக 24, 2025 11:32 PM

பொள்ளாச்சி; விபத்துகளை தவிர்க்க, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அதிக மாணவர்களை ஏற்றிச் செல்வதை கண்டறிந்து தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், பள்ளி வாகனங்களை தவிர்த்து, ஆட்டோ, வேன், உள்ளிட்ட பிற வாகனங்களிலும், மாணவ, மாணவியர் பள்ளிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
இந்த வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சில விதிமுறைகளை பின்பற்ற போக்குவரத்துத் துறையினர் அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆட்டோக்களில், 12 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியராக இருப்பின் ஐந்து பேர் வரையும், 12 வயதுக்கு மேல் இருப்பின், மூன்று பேரை அனுமதிக்கலாம். கம்பியில் அமர வைத்துக் கொண்டோ, புத்தகப் பைகளை ஆட்டோவுக்கு வெளியில் தொங்கவிட்டும் செல்லக் கூடாது. ஓட்டுநர் அருகில் எவரையும் உட்கார வைக்கக்கூடாது என, தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வேன் உள்ளிட்ட வாகனங்களில், நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில், மாணவர்களை அழைத்து செல்லலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில், விதிமுறைகளை மீறி அதிகளவில் மாணவர்களை அழைத்து செல்கின்றனர்.
அதிக மாணவர்களை ஏற்றிச் செல்லுதல், அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், ஓட்டுநர் உரிமங்கள் இல்லாமல் இயக்குதல் உள்ளிட்ட விதிமீறலை கண்டறிந்து தடுக்க, போக்குவரத்து துறை வாயிலாக கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், 'விபத்துகளை தவிர்க்க, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அதிக மாணவர்களை அழைத்து செல்லக் கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனாலும் சிலர், விதிகளை மீறுகின்றனர். தகவல் கிடைக்கும்பட்சத்தில், அதிக மாணவர்களை அழைத்து செல்லும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.