/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
/
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
ADDED : டிச 17, 2024 11:35 PM

பெ.நா.பாளையம்; தமிழகத்தில் டெங்கு காய்ச்சலில் சிக்கி நடப்பு ஆண்டில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை காரணமாக காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ்., கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, நோய்களை பரப்பி வருகின்றன.
இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம் கூறுகையில்,'' பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் தங்களது வீடு, கடை, வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் நீர் சேகரிப்பு கொள்கலன்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தேவையற்ற உடைந்த பொருட்கள் இருப்பின், உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தினசரி குடிநீரை காய்ச்சி பருக வேண்டும்.
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதித்தவர்கள் யாரும் இல்லை. பேரூராட்சி சார்பில் நியமனம் செய்யப்பட்ட ஊழியர்கள் தினசரி வீடுகளுக்கு சென்று டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த தொட்டிகளில் 'அபேட்' மருந்துகளை தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுகாதார ஊழியர்கள் சாக்கடைகளில் கொசு உற்பத்தியை தடுக்க மருந்து தெளிக்கின்றனர். சுகாதார துறை சார்பில் பெறப்படும் அன்றாட மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் காய்ச்சல் பாதித்துள்ளவர்கள் இருக்கும் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி, துாய்மை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என்றார்.