/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
/
பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
ADDED : ஆக 12, 2025 08:14 PM

வால்பாறை; தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, வால்பாறையில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட்டன.
வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ஒன்று முதல் 19 வயது வரையுள்ள மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முடீஸ், சோலையாறுநகர் துணை சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில், 'அல்பெண்டாசோல்' எனும் குடற்புழுநீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
வால்பாறையில் ஒன்று முதல் 19 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக, சுகாதார பணியாளர்கள் நேரில் வழங்கினர்.
வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாபுலட்சுமணன் கூறியதாவது:
வால்பாறை தாலுகாவில் ஒன்று முதல் 19 வயதுக்கு உட்பட்ட, 13,500 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. அரசு ஆரம்ப சுகாதார பணியாளர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று, ஆசிரியர் கண்காணிப்பில் மாத்திரைகள் வழங்கப்பட்டன. குடற்புழு நீக்க மருந்து உணவு உட்கொண்ட பின், நன்றாக சப்பி மென்று விழுங்க வேண்டும். அதன் பின் தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு, கூறினார்.
உடுமலை தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உடுமலை பாலப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், கை கழுவுதல் அவசியம், அதன் முறைகள் குறித்தும், உணவு உண்ணும் முன்பும், கழிவறைக்கு சென்று வந்த பின்னரும் கைகளை சுத்தமாக கழுவுதல், திறந்தவெளியில் மலம் கழிக்கக்கூடாது எனவும், மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.