/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டிக்' எம்.எஸ்.எம்.இ., கடன் மேளா
/
'டிக்' எம்.எஸ்.எம்.இ., கடன் மேளா
ADDED : ஜூலை 31, 2025 10:01 PM
கோவை; தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் நடந்த எம்.எஸ்.எம்.இ., தொழில்களுக்கான சிறப்பு கடன் மேளாவில், ரூ.44 கோடி மதிப்பிலான 46 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
'டிக்' எனப்படும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில், கடந்த ஜூன் மாதம் முழுக்க, தமிழக அரசு சார்பில், குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்புத் தொழில் கடன் விழா நடந்தது.
இதில், தமிழக அரசின் பல்வேறு மானியங்கள், 'டிக்' செயல்படுத்தி வரும் கடன் வசதி திட்டங்கள், நீட்ஸ், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், 'கலைஞர் பசுமை ஆற்றல் திட்டம்' முதலீட்டு மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு கடன் வழங்க, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
சிறப்பு முகாமில், விண்ணப்பங்கள் மீதான ஆய்வுக்கட்டணத்துக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டது.
கோவை கிளையைப் பொறுத்தவரை, ரூ.43.61 கோடி மதிப்பிலான கடன் கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, 'டிக்' மண்டல மேலாளர் பேபி, கிளை மேலாளர் சுஷ்மிதா ஆகியோர் கூறுகையில், “சிறப்பு முகாமில் 46 விண்ணப்பதாரர்களிடம் இருந்து ரூ. 43.61 கோடிக்கு கடன் கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பம் பெறும்போதே, உரிய வழிகாட்டு நெறி முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இவை விரைவில் பரிசீலிக்கப்பட்டு, கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.