UPDATED : நவ 01, 2026 04:08 PM
ADDED : நவ 01, 2026 04:06 PM

ஆனைமலை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஆழியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.
பி.ஏ.பி., திட்டத்தில் முக்கிய அணைகளில் ஒன்றான ஆழியாறு அணை உள்ளது. இந்த அணை மழை காலங்களில் முழு கொள்ளளவை எட்டி, 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படும்.
இந்த நீரில், கோபாலபுரம் – மீனாட்சிபுரம் இடையேயான தரைப்பாலம், காளியப்பகவுண்டன்புதுார் தரைப்பாலங்கள் மூழ்கிவிடும். ஆற்றோரப்பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையின் உதவி ஆய்வாளர் பிரதீப் பட் தலைமையில், மீட்பு படை வீரர்கள் சிவசுப்ரமணியம், ஜெயகுணம், மனோகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆழியாறு அணையில் ஆய்வு செய்தனர்.
ஆனைமலை வருவாய்துறை அதிகாரிகளிடம், வடகிழக்கு பருவமழை பேரிடர் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
நீர்வளத்துறையிடம், அணையின் நீர் இருப்பு, அதிகபட்ச வெள்ள அளவு, அணையின் நீர் வழித்தடங்கள், மதகுகளின் உறுதித்தன்மை, வெள்ளம் ஏற்படும் காலத்தில் அணையின் மேற்கொள்ளப்படும் நீர் மேலாண்மை, ஆழியாறு ஆற்றில் திறக்கப்படும் வெள்ள நீரால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படுமா என்பது குறித்து கேட்டறிந்தனர்.
ஆழியாறு அணை நீர்மட்டம், உபரிநீர் வெளியேறும் பகுதிகள், மதகுகள் உறுதித்தன்மை, இயக்குநிலையில் மதகுகள் உள்ளதா என ஆய்வு செய்தனர்.
