'பஸ் பே'க்களை ஆக்கிரமிக்கும் வாகனங்களால்... பயணியருக்கு இடையூறு!: விபத்து ஏற்படுவதற்குள் நடவடிக்கை எடுக்கணும்
'பஸ் பே'க்களை ஆக்கிரமிக்கும் வாகனங்களால்... பயணியருக்கு இடையூறு!: விபத்து ஏற்படுவதற்குள் நடவடிக்கை எடுக்கணும்
UPDATED : ஆக 08, 2026 04:53 AM
ADDED : ஆக 07, 2026 05:31 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சி.டி.சி., மேடு புதிய பஸ் ஸ்டாண்ட்டுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பகுதிகளில், வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி சி.டி.சி., மேட்டில், 3.25 ஏக்கர் இடத்தில், 9.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் கடந்த ஆட்சியில் திறக்கப்பட்டது. அதன்பின், பஸ்கள் இயக்கம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அதில், பொள்ளாச்சி - கோவை ரோட்டில், பொதுப்பணித்துறை அலுவலகம், பழைய சாந்தி தியேட்டர் மற்றும் புது பஸ்ஸ்டாண்ட் எதிர்புறத்தில் 'பஸ் பே' நிழற்கூரை அமைக்கப்பட்டது.
காலை, 4:10 மணி முதல் இரவு, 10:00 மணி வரை ஒவ்வொரு, 15 நிமிடத்துக்கு ஒரு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருப்பூர், பல்லடம், ஈரோடு, சேலம், தாராபுரம், கரூர் உள்ளிட்ட வழித்தட பஸ்கள் இவ்வழியாக இயக்கப்படுகின்றன.
பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள், பொள்ளாச்சி ரோடு வழியாக வந்து அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கம் சாலை வழியாக, பல்லடம் ரோடுக்கு செல்கிறது. அதே போன்று, திருப்பூர், பல்லடத்தில் இருந்து வரும் பஸ்கள், கோவை ரோடு வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் செல்கிறது.
திருப்பூர், தாராபுரத்தில் இருந்து வருவோர், பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கி பழைய பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து செல்கின்றனர். அதே போன்று திருப்பூர் செல்வோரும் அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் இருந்து பஸ்சில் ஏறி பஸ் ஸ்டாண்டுக்கு செல்கின்றனர். இந்நிலையில், இந்த பஸ் ஸ்டாப்புகளை ஆக்கிரமித்து, கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி - கோவை ரோடு பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே, பழைய சாந்தி தியேட்டர் அருகே, சி.டி.சி., பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே பயணியர் நிற்பதற்காக நிழற்கூரைகள் அமைக்கப்பட்டன. அங்கு, பஸ்கள் ஒதுங்கி நிற்க 'பஸ் பே' அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு, கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தம் செய்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
காரில் வருவோர் ரோட்டையும், நிழற்கூரையும் ஆக்கிரமித்து தாறுமாறாக நிறுத்தம் செய்கின்றனர். இதனால், நிழற்கூரையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் ரோட்டிலேயே நிற்கின்றனர். நிழற்கூரை அருகே பஸ் நிறுத்தம் செய்ய முடியாததால், ரோட்டிலேயே பஸ்சை நிறுத்தி பயணியரை ஏற்றி, இறக்குகின்றனர். இதனால், மற்ற வாகன போக்குவரத்து பாதித்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், ரோட்டில் வேகமாக வரும் வாகனங்கள், பஸ்சிற்காக காத்திருக்கும் மக்கள் மீது மோதி அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே, ரவுண்டானா பகுதியில், வாகன நெரிசல் உள்ள நிலையில், தற்போது பஸ்களும் நிறுத்தம் செய்வதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. ரோட்டை ஆக்கிரமிக்கும் கார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இதனால், அவசரத்துக்கு செல்லக்கூடிய வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது. பஸ் இயக்கத்துக்கு முன்பாக இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர கதியில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்ததால் சிரமமாக உள்ளது. எனவே, அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு நெரிசல் தவிர்க்கவும், பஸ் ஸ்டாப்பில் இடையூறு இல்லாதவாறும் நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.
இவ்வாறு, கூறினர்.
