/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளி தித்திக்குமா? கொப்பரை விலை உயரும் நேரத்தில் திடீர் சரிவு; 'நாபிட்' விற்பனையை பிப்., மாதம் துவங்கணும்
/
தீபாவளி தித்திக்குமா? கொப்பரை விலை உயரும் நேரத்தில் திடீர் சரிவு; 'நாபிட்' விற்பனையை பிப்., மாதம் துவங்கணும்
தீபாவளி தித்திக்குமா? கொப்பரை விலை உயரும் நேரத்தில் திடீர் சரிவு; 'நாபிட்' விற்பனையை பிப்., மாதம் துவங்கணும்
தீபாவளி தித்திக்குமா? கொப்பரை விலை உயரும் நேரத்தில் திடீர் சரிவு; 'நாபிட்' விற்பனையை பிப்., மாதம் துவங்கணும்
ADDED : அக் 28, 2024 11:36 PM
பொள்ளாச்சி : தீபாவளி பண்டிகையையொட்டி கொப்பரை விலை உயரும் என எதிர்பார்த்த நிலையில், 'நாபிட்' கொள்முதல் செய்த கொப்பரையை விற்பனை செய்வதால், வெளிமார்க்கெட்டில் விலை உயரவில்லை. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், விளையும் தேங்காய், உற்பத்தி செய்யப்படும் கொப்பரை போன்றவை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். விலை இல்லாதது; வறட்சி, நோய் தாக்குதல் போன்ற காரணங்களால், தென்னை விவசாயிகள் மீளாத்துயரில் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தேங்காய் மற்றும் கொப்பரை விலை கிடுகிடுவென உயர்ந்தது. மேலும் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பெரிய நிறுவனங்கள், இடைத்தரகர்கள், 'சிண்டிகேட்' அமைத்ததால், விலை உயர்வில் சிக்கல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகைக்கு, கொப்பரை உலர்களங்களில் பணியாற்றுவோர் விடுமுறைக்கு சென்ற நிலையில், கொப்பரை உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், கொப்பரை விலை உயரும் என எதிர்பார்த்த நிலையில், 'நாபிட்' நிறுவனம் ஆதார விலை திட்டத்தில் கொள்முதல் செய்த கொப்பரையை விற்பனை செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தென்னை விவசாயி தங்கவேலு கூறியதாவது:
தேங்காய், கொப்பரை விலை மேலும் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன், கொள்முதல் செய்த கொப்பரையை 'நாபிட்' நிறுவனம், சீசன் இல்லாத ஜன., பிப் மாதங்களில் விற்பனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், 'நாபிட்' நிறுவனம், கொப்பரை கிலோ, 120 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது. இதனால், வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை சரிவு ஏற்பட்டு, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளது.
கொள்முதல் செய்த கொப்பரையை அரசு விற்பனை செய்யும் சூழலில், வெளிமார்க்கெட்டில் மேலும் விலை சரிவு ஏற்படும். விலை உயரும் என காத்திருந்த நிலையில், இது ஏமாற்றத்தை அளிக்கிறது.
விவசாயிகளின் நிம்மதி பெருமூச்சு கொஞ்ச நாள் கூட நீடிக்காமல் உடனடியாக 'சிண்டிகேட்' அமைத்து விலை குறைப்பு, அரசு கொள்முதல் செய்த கொப்பரையை வாங்க ஆர்வம் காட்டுவதால், விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி கடும் வெயிலின் தாக்கத்தாலும், இந்தாண்டு வரத்து குறைவாக இருந்ததால் விலை உயரக்கூடிய வாய்ப்பு இருந்தது. 'நாபிட்' விற்பனையால் அந்த வாய்ப்பும் பாதித்தது. தேங்காய், கொப்பரை விலை உயர்ந்தால் மட்டுமே, இந்தாண்டு விவசாயிகளுக்கு தீபாவளி பண்டிகை தித்திப்பாக அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.