/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓ.டி.பி., இல்லாமல் உறுப்பினர் சேர்க்கையில் தி.மு.க., மும்முரம்
/
ஓ.டி.பி., இல்லாமல் உறுப்பினர் சேர்க்கையில் தி.மு.க., மும்முரம்
ஓ.டி.பி., இல்லாமல் உறுப்பினர் சேர்க்கையில் தி.மு.க., மும்முரம்
ஓ.டி.பி., இல்லாமல் உறுப்பினர் சேர்க்கையில் தி.மு.க., மும்முரம்
ADDED : ஜூலை 25, 2025 09:34 PM
கோவை; 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தின் கீழ், ஓ.டி.பி., இல்லாமல் உறுப்பினர் சேர்க்கை நடத்த, கோவை மாவட்ட தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 10 லட்சம் வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, பூத் கமிட்டியினர் வீடு வீடாகச் செல்கின்றனர்.
ஓட்டுப்போடும் தகுதியுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களது விபரங்களை சேகரித்து, தி.மு.க.,வில் உறுப்பினராக சேர்க்கின்றனர். இதற்காக பிரத்யேகமாக உருவாக்கியுள்ள செயலியில், வாக்காளர் விபரங்களை பதிவேற்றம் செய்ததும், அவர்களது மொபைல் போன் எண்ணுக்கு ஓ.டி.பி., வருகிறது. அந்த எண்ணை பதிவு செய்தால், உறுப்பினராக இணைந்ததாக கணக்கில் சேர்க்கப்படுகிறது.
மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்த வழக்கில், ஓ.டி.பி., பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதனால், அச்செயலியை 'அப்டேட்' செய்து, ஓ.டி.பி., இல்லாமல் பதிவு செய்யும் முறைக்கு மாற்றியுள்ளனர்.
தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'கோவையில் பெரும்பாலான பூத்களில், 30 சதவீத வாக்காளர்களை இணைத்து விட்டோம். அடுத்த கட்டமாக, 40 சதவீதத்தை எட்ட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது; 40 சதவீதத்தை கடந்தவர்கள், 50 சதவீதத்தை நோக்கி பயணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க.,வை தவிர மாற்றுக்கட்சியினர் வீட்டுக்கும் சென்றோம். சில வீடுகளில் பெண்கள் ஆர்வம் காட்டினர்; ஆண்கள் தவிர்த்து விட்டனர்.
சிங்காநல்லுார் தொகுதியில் ஒரு லட்சத்து, 1,347 பேர், கோவை வடக்கு தொகுதியில், 99,594, பேர், கோவை தெற்கு தொகுதியில், 64,228 பேர் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கின்றனர். கோவை மாநகர் மாவட்ட தி.மு.க.,வில் தெற்கு தொகுதியில் மட்டும் குறைவாக உள்ளது' என்றனர்.