/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வார்டு செயலாளர்களே இல்லை கோவையில் தடுமாறுது தி.மு.க.,
/
வார்டு செயலாளர்களே இல்லை கோவையில் தடுமாறுது தி.மு.க.,
வார்டு செயலாளர்களே இல்லை கோவையில் தடுமாறுது தி.மு.க.,
வார்டு செயலாளர்களே இல்லை கோவையில் தடுமாறுது தி.மு.க.,
ADDED : ஏப் 05, 2025 11:28 PM
கோவை: கோவை மாவட்டத்தில், பல இடங்களில் வார்டு கிளை செயலாளர்களே இல்லாமல், கட்சியின் உள்கட்டமைப்பு வலுவின்றி இருப்பதால், தி.மு.க., தடுமாறி வருகிறது.
தமிழகத்தை ஆளும் தி.மு.க.,வால், 2021 சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளில் ஒன்றை கூட வெற்றி பெற முடியவில்லை.
இது, தலைமைக்கு நெருடலை ஏற்படுத்தியதால், உள்ளாட்சி தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல்களில் வெற்றி பெற்று, தி.மு.க., கோட்டையாக மாறி விட்டது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
வார்டு அளவில் கள ஆய்வு செய்தால், மாவட்ட அளவில், கிட்டத்தட்ட, 50 வார்டுகளில் தி.மு.க.,வுக்கு கிளைச் செயலாளர்களே இல்லை என்கிற தகவல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அந்தளவுக்கு உள்கட்டமைப்பு குலைந்து, பலவீனமாக இருப்பதாக, அக்கட்சியினரே கூறுகின்றனர்.
இதுதொடர்பாக, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு ரகம். உள்ளாட்சி மற்றும் லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியை வைத்து, சட்டசபையில் வெல்ல முடியாது. ஏனெனில், தி.மு.க.,வா, அ.தி.மு.க.,வா என்கிற நேரடி போட்டி இதற்கு முன் இருந்தது; இப்போது அப்படியில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவும், எதிர்க்கட்சிகள் பிரிந்திருப்பதும் தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கிறது.
நலத்திட்டங்கள் கை கொடுக்கும் என, தலைமையை நிர்வாகிகள் நம்ப வைக்கின்றனர். மக்களுக்கும், ஆட்சிக்கும் இடைவெளி அதிகமாக இருக்கிறது. அடிமட்ட தொண்டனுக்கும், கட்சிக்கும் இடையே நெருக்கம் இல்லை. சீனியர்கள் ஒதுங்கி இருக்கின்றனர். வெவ்வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள், அதிகாரத்தில் உள்ளனர்.
கட்சிக்கு வார்டு செயலாளர் மற்றும் கவுன்சிலர்களே மிகவும் முக்கியம். கவுன்சிலர்களை பூத் கமிட்டிக்கு நியமிக்கவில்லை. அவர்கள் கட்சிப்பணிக்கு துாரமாக நிற்கிறார்கள். விழாவுக்கு கவுரவ விருந்தினர்கள் போல் வந்து செல்கின்றனர்.
உயிரிழந்தது; வேறு கட்சிகளுக்கு தாவியது; கட்சி பணி வேண்டாமென ஒதுங்கியதென மாவட்ட அளவில், 50 இடங்களில் வார்டு கிளை செயலாளர்கள் இல்லை. உதாரணத்துக்கு, சுகுணாபுரம் பகுதி கழக செயலாளரே, வார்டு செயலாளராகவும் இருக்கிறார்.
ஆர்.எஸ்.புரத்தில் இரண்டு பேர், கட்சியை விட்டு சென்று விட்டனர். செல்வபுரத்தில் ஒருவர் வேறு கட்சிக்கு சென்று விட்டார். குனியமுத்துாரில் செயலாளர் ராஜினாமா செய்து பல மாதங்களாகி விட்டது.
இப்போது, 3,000 வாக்காளர்களுக்கு ஒரு வார்டு செயலாளர், 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு பகுதி கழக செயலாளர் என, கட்சி கட்டமைப்பை பிரித்து, கூடுதலாக பலருக்கும் வாய்ப்பு கொடுக்கப் போவதாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
இன்னும் நியமித்தபாடில்லை. கட்சி பலவீனமாகி வருவதை தலைமை உணராமல் இருக்கிறது. இதே ரீதியில் சென்றால், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது மிகவும் சிரமமாகி விடும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

