/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கெரடி கோயில் எங்கே இருக்கிறது தெரியுமா?
/
கெரடி கோயில் எங்கே இருக்கிறது தெரியுமா?
ADDED : நவ 11, 2025 10:51 PM
கோவை நகரின் மேற்கில் கருப்ப கவுண்டர் வீதியும், பெரியகடைவீதியும் இணையும் பகுதியில் அமைந்துள்ளது இந்த கோயில். இக்கோயிலைதான் பக்தர்கள் பல ஆண்டுகளாக, 'கெரடி கோயில்' என்று அழைத்து வருகின்றனர்.
பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பு, மைசூர் மன்னரின் ஆட்சிக்காலத்தில் மைசூரிலிருந்து சாம்ராஜ்நகர், சத்தியமங்கலம் வழியாக மைசூர் மன்னர் கோவைக்கு வந்த போது, வழியில் லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி விக்ரஹத்தை கண்டெடுத்தார்.
அந்த விக்ரஹத்தை, மன்னருடன் வந்த ஜிட்டி சமூகத்தை சேர்ந்த, படை வீரர்களிடம் ஒப்படைத்தார். படைவீரர்கள் அன்றாடம் தேகப்பயிற்சி செய்யும், கெரடிகூடத்தில் இருக்கும் நிம்புஜாதேவி சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னிதிக்கு அருகே வைத்து, தினமும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர். காலப்போக்கில், ஜிட்டி சமூகத்தினர் துளுவ வேளாள வம்சத்தை சேர்ந்தவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள், பிரம்மாண்ட கோயிலாக மாற்றி, ஸ்ரீரங்க கோயில் நடைமுறைகளின்படி, அன்றாட பூஜைகளையும், வழிபாடுகளையும் செய்து வருகின்றனர்.
தற்போது இக்கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுகள் பல கடந்தாலும், கெரடி கோயில் என்ற பெயர் நிலைத்து நிற்கிறது. கெரடி என்றால், கன்னடத்தில் தேகப்பயிற்சி சாலை என்று பொருள்.
ஸ்ரீ வைஷ்ணவர்களால், பெரிய கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் உற்சவங்கள், அன்றாட பூஜை நடைமுறைகள், இக்கோயிலில் இன்றளவும் பின்பற்றப்படுகிறது.

