/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரட்டை கொலை வழக்கு; 5 பேருக்கு இரட்டை ஆயுள்
/
இரட்டை கொலை வழக்கு; 5 பேருக்கு இரட்டை ஆயுள்
ADDED : அக் 27, 2025 10:17 PM
கோவை: கோவையில், இறைச்சி வியாபாரிகள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 பேருக்கு இரட்டை ஆயுள், தலா நான்கு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கோவை, மரக்கடை, திருமால் வீதியில் வசித்து வந்தவர் மொய்தீன் பாஷா,34; அதே பகுதியில் இறைச்சி கடை வைத்திருந்தார். தெற்கு உக்கடம், லாரிபேட்டையை சேர்ந்த சாதிக் அலி என்பவர், உக்கடத்தில் இறைச்சிக்கடை வைத்திருந்தார்.
2015, அக்., 31ல், மொய்தீன் பாஷா மார்க்கெட் சென்றிருந்த போது, அவருக்கு தெரியாமல் நான்கு கிலோ மாட்டிறைச்சியை, சாதிக் அலி எடுத்து சென்றுள்ளார். கடைக்கு திரும்பி வந்த மொய்தீன் பாஷா இதையறிந்து, சாதிக் அலியின் கடைக்கு சென்று, 'என்னை கேட்காமல் எதற்காக இறைச்சியை எடுத்து வந்தாய்' என்று சத்தம் போட்டார்.
அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. சமரசம் பேச, அன்றைய தினம் மாலையில், இரு தரப்பினரும் ஒப்பணக்கார வீதி- இடையர்வீதி சந்திப்பில் ஒன்று கூடினர்.
அப்போது ஏற்பட்ட தகராறில், மொய்தீன் பாஷா, இவருக்கு ஆதரவாக பேசிய இறைச்சி வியாபாரி ஹபீப் முகமது,32, ஆகியோரை, சாதிக்அலி உள்ளிட்ட 6 பேர் கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
இது தொடர்பாக, தெற்கு உக்கடம், லாரி பேட்டையை சேர்ந்த சாதிக்அலி,41, ேஷக் அலி,38, திருமால் வீதி அஸ்கர் அலி,41, மன்சூர் அலி,33, உக்கடம், எஸ்.எச். ரோடு ஜாகிர்உசேன்,51, தெற்கு உக்கடம், 3வது கிராஸ் அசாருதீன்,34, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீது, கோவை ஐந்தாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில், வழக்கு விசாரணை நடந்து வந்தது.
விசாரணை முடிந்ததை தொடர்ந்து, சாதிக் அலி, அஸ்கர்அலி, மன்சூர் அலி, ஜாகிர்உசேன், அசாருதீன் ஆகியோருக்கு, தலா இரட்டை ஆயுள்சிறை, தலா நான்கு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சிவகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.
வழக்கு விசாரணையில் இருந்த போது ேஷக் அலி, விபத்தில் இறந்து விட்டதால், அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் மோகன்பிரபு ஆஜரானார்.

