/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேயிலைக்கு 'ட்ரோன்' வாயிலாக மருந்து தெளிப்பு; தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை
/
தேயிலைக்கு 'ட்ரோன்' வாயிலாக மருந்து தெளிப்பு; தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை
தேயிலைக்கு 'ட்ரோன்' வாயிலாக மருந்து தெளிப்பு; தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை
தேயிலைக்கு 'ட்ரோன்' வாயிலாக மருந்து தெளிப்பு; தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை
ADDED : டிச 12, 2025 06:26 AM

வால்பாறை: தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, 'ட்ரோன்' வாயிலாக தேயிலை செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது.
வால்பாறையில், 50க்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர, சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.
பல்வேறு எஸ்டேட்களில் தயாரிக்கப்படும் தேயிலைத்துாள், கோவை, கொச்சி, குன்னுார் போன்ற ஏல மையங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், வால்பாறையில் வடகிழக்குப் பருவமழை பெய்யும் நிலையிலும் இடையிடையே வெயில் நிலவுவதால், தேயிலைக்கு போதிய அளவு தண்ணீர் கிடைத்துள்ளதோடு, சூரிய ஒளியும் கிடைக்கிறது. இதனால் தேயிலை உற்பத்தி அதிகரிக்கத்துவங்கியுள்ளது.
தொழிலாளர் பற்றாக்குறையினால் பெரும்பாலான தேயிலை எஸ்டேட்களில், தேயிலை பறிப்பதிலும், மருந்து தெளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வரவழைக்கப்பட்டு, தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல், நவீன இயந்திரம் வாயிலாக தேயிலை பறிக்கும் பணியும் நடக்கிறது.
இந்நிலையில், தற்போது வால்பாறை அடுத்துள்ள நடுமலை, முருகாளி, ேஷக்கல்முடி உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்களில் 'ட்ரோன்' வாயிலாக பூச்சி மருந்து தெளிக்கும் பணியும் நடக்கிறது.
தோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
வனவிலங்கு - மனித மோதல் அதிகரிப்பாலும், எதிர்பார்த்த கூலி கிடைக்காததாலும் தொழிலாளர்கள் தொடர்ந்து எஸ்டேட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்கள் வந்தாலும், தேயிலை தொழில் முழுமையாக செய்ய முடியாத நிலை உள்ளது.
இதை சமாளிக்க, வால்பாறையில் தற்போது 'ட்ரோன்' வாயிலாக தேயிலை செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணி நடக்கிறது. பல தொழிலாளர்கள் செய்ய வேண்டிய பணியை, ஒரு 'ட்ரோன்' செய்கிறது. இதை கையாளுவதற்கு தொழிலாளர்களுக்கு போதிய பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.

