/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிக வெப்பத்தால் மல்பெரி, பட்டுக்கூடு உற்பத்தியில் சிக்கல்
/
அதிக வெப்பத்தால் மல்பெரி, பட்டுக்கூடு உற்பத்தியில் சிக்கல்
அதிக வெப்பத்தால் மல்பெரி, பட்டுக்கூடு உற்பத்தியில் சிக்கல்
அதிக வெப்பத்தால் மல்பெரி, பட்டுக்கூடு உற்பத்தியில் சிக்கல்
ADDED : மார் 09, 2024 07:40 AM

உடுமலை : கோடை காலத்தில், தரமான மல்பெரி இலைகளை உற்பத்தி செய்ய முடியாததால், பட்டுக்கூடுகள் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், வெண்பட்டுக்கூடுகள் உற்பத்திக்காக, 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக மல்பெரி செடிகளை நட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.
தரமான பட்டுக்கூடுகள் உற்பத்தியாவது, மல்பெரி இலைகளின் தரத்தை பொறுத்தே அமைகிறது. பட்டுப்புழுக்களுக்கு உணவாக வழங்கும் மல்பெரி இலைகளில் நோய்த்தாக்குதல், சத்து குறைபாடு பிரச்னை இருந்தால், பட்டுக்கூடுகளின் நுாற்பு திறன் குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
எனவே, உடுமலை பகுதி விவசாயிகள், மல்பெரி தோட்ட பராமரிப்பில், அதிக கவனம் செலுத்துகின்றனர். நீர் மேலாண்மைக்காக சொட்டு நீர் பாசனம் அமைத்து, நீர் வழி உரம் வழங்குதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பின்பற்றுகின்றனர். சீதோஷ்ண நிலையும் ஒத்துப்போனதால், வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில், மாநில அளவில், உடுமலை பகுதி முன்னிலை வகித்தது.
வெப்பத்தால் சிக்கல்
இந்தாண்டு முன்னதாகவே கோடை வெயில் துவங்கி கொளுத்தி வருவதால், பெரும்பாலான பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. போதிய தண்ணீர் இல்லாததால், பட்டுக்கூடு வளர்ப்பை தற்காலிகமாக சில விவசாயிகள் கைவிட்டுள்ளனர்.
மேலும், அதிக வெயில், வறட்சியான காற்று, அதிகாலை நேரத்தில், வறட்சியான பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால், தரமான மல்பெரி இலைகளை உற்பத்தி செய்ய முடியவில்லை.
புழு வளர்ப்பு மனைகளிலும், வெப்ப நிலையை சீராக வைத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, வரும் சீசனில், வெண்பட்டுக்கூடு உற்பத்தி வெகுவாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'அதிக வெயில் காரணமாக, மல்பெரி தோட்டம் மற்றும் புழு வளர்ப்பு மனைகளில் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, நீர் மேலாண்மை, தோட்ட பராமரிப்பு, புழு வளர்ப்பு மனையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பட்டு வளர்ச்சித்துறை வாயிலாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த வேண்டும்' என்றனர்.

