/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிழக்கு புறவழிச் சாலை 'மார்க்கிங்' பணி துவக்கம்
/
கிழக்கு புறவழிச் சாலை 'மார்க்கிங்' பணி துவக்கம்
ADDED : ஆக 22, 2025 11:25 PM
அன்னுார்: கோவை கிழக்கு புறவழிச் சாலைக்கு மார்க்கிங் செய்யும் பணி துவங்கியது.
கரூரிலிருந்து கோவைக்கு பசுமை வழிச் சாலை அமைக்கப்படும் என பத்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்காக 2016ல் அன்னுாரில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. எல்லை கற்கள் நடப்பட்டன. எனினும் அதன் பிறகு ஒன்பது ஆண்டுகளாக இப்பணி முடங்கியது.
இந்நிலையில் சில மாற்றங்களுக்குப் பிறகு மீண்டும் சர்வே செய்யும் பணியும், மார்க்கிங் செய்யும் பணியும் துவங்கி உள்ளது.
ஏற்கனவே கோவை மேற்கு புறவழிச் சாலை மதுக்கரை அருகே துவங்கி கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே முடிகிறது. இந்த அரை வட்டச் சாலையுடன் மேலும் ஒரு அரைவட்ட சாலையை இணைப்பதன் வாயிலாக தெற்கிலிருந்து நீலகிரி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்வோர் கோவை நகருக்குள் செல்லத் தேவையில்லை. எனவே,இதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வரைவு அறிக்கை தயாரித்தது. கோவை எல்.என்.டி. பைபாஸ் சாலையில் பாலத்துறை அருகே துவங்கி பல்லடம், சூலுார், அன்னுார் தாலுகா வழியாக 81 கி.மீ. துாரத்திற்கு இந்த புதிய சாலை அமைய உள்ளது.
இது கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையை கணேசபுரம் அருகே கடந்து செல்கிறது. நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே கோவை-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இச்சாலை இணைகிறது. கடந்த இரண்டு நாட்களாக அன்னூருக்கு தெற்கே உள்ள கிட்டாம்பாளையம், செம்மி பாளையம், செம்மாண்டம் பாளையம் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலை துறையினர் சர்வே பணியில் ஈடுபட்டனர். மார்க்கிங்கும் செய்துள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சர்வே துவங்கி உள்ளது.
இதுகுறித்து பதுவம்பள்ளி விவசாயிகள் கூறுகையில், ''இந்த புதிய சாலையால் பெரிய பயன் இருக்காது. விவசாய நிலங்கள், தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள் பாதிக்கப்படும். 65 மீட்டர் அகலத்திற்கு சாலை அமையும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே உள்ள சாலைகளை அகலப்படுத்தலாம்,'' என்றனர்.