/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வி வளர்ச்சி நாள் விழா; காமராஜருக்கு புகழஞ்சலி
/
கல்வி வளர்ச்சி நாள் விழா; காமராஜருக்கு புகழஞ்சலி
ADDED : ஜூலை 15, 2025 10:13 PM

பெ.நா.பாளையம்; பள்ளிகள் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.
* நரசிம்மநாயக்கன்பாளையத்தில் காங்., கட்சி சார்பில் காமராஜர், 123 வது ஆண்டு பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளையொட்டி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து காங்., கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
பன்னிமடை பஸ் ஸ்டாண்ட், கணுவாய் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
* கவுண்டம்பாளையம் வட்ட காங்., கமிட்டி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா டி.வி.எஸ்., நகரில் நடந்தது. வட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி கொடியேற்றினார். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரிய பிரகாஷ் இனிப்பு வழங்கினார்.
* நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், கல்வி வளர்ச்சி நாளையொட்டி காமராஜரின் சேவைகளை பாராட்டி, சிறப்பு பேச்சுப்போட்டி நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரகுநாதன், உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பெட்டதாபுரம் நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் மதியழகன் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவி சசிகலா தலைமை வகித்தார். பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் சுப்பையன் வாழ்த்துரை வழங்கினார். கல்வியாளர் ரங்கசாமி, காமராஜ் ஆற்றிய சமுதாயப் பணிகளை மாணவர்களுக்கு எடுத்து கூறினார். பேச்சு, ஓவியம், கட்டுரை, மாறுவேடம், பாட்டு, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர் திருநாவுக்கரசு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியை நந்தினி நன்றி கூறினார்.
* பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் கல்வி இயக்குனர் குணசேகர் முன்னிலை வகித்தார். தமிழ் ஆசிரியர் விவேகானந்தன் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் மாடசாமி, காமராஜரின் குணநலன்கள், சாதனைகள், கல்விக்காக அவர் ஆற்றிய அரும் பணிகள், அரசியல் வாழ்க்கை, காமராஜரின் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார்.
விழாவையொட்டி நடந்த கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவி தலைமை ஆசிரியர் உஷாராணி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.