/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மர்மவிலங்குகள் கடித்ததில் எட்டு பேர் காயம்: செந்நாய் கூட்டம் என, பொதுமக்கள் அச்சம்
/
மர்மவிலங்குகள் கடித்ததில் எட்டு பேர் காயம்: செந்நாய் கூட்டம் என, பொதுமக்கள் அச்சம்
மர்மவிலங்குகள் கடித்ததில் எட்டு பேர் காயம்: செந்நாய் கூட்டம் என, பொதுமக்கள் அச்சம்
மர்மவிலங்குகள் கடித்ததில் எட்டு பேர் காயம்: செந்நாய் கூட்டம் என, பொதுமக்கள் அச்சம்
ADDED : பிப் 13, 2024 12:08 AM

கோவை:குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும், அடையாளம் தெரியாத விலங்கு கடித்ததில், எட்டு பேர் காயமடைந்தனர். செந்நாய் என பொதுமக்கள் தெரிவிப்பதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில், பழைய டாஸ்மாக் குடோன் இருந்தது. இதன் அருகே உள்ள தயாளு வீதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இதன் அருகில், சங்கனுார் - நல்லாம்பாளையம் ரோட்டில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான, 60 ஏக்கர் பரப்பில் வனப்பகுதி உள்ளது.
கடந்த சில தினங்களாக, இப்பகுதியில் இரவில் செல்வோரை கூட்டமாக வரும் அடையாளம் தெரியாத விலங்குகள் கடித்ததில், எட்டுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக இப்பகுதியில், உள்ள தனியார் பைப் குடோனில் பணிபுரியும் செக்யூரிட்டியை மர்ம விலங்கு கடித்தத்தில், காலில் விரல் துண்டானதுடன், படுகாயமும் அடைந்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கோவிந்தராஜ் என்பவர் கூறுகையில், ''நாட்டு நாய்கள், பெரியவர்களை கடித்து இழுக்கும் திறன் குறைந்தவை. அவை தாக்குவதை பார்க்கும் போது, செந்நாய்கள் போல் உள்ளன. செக்யூரிட்டி தவிர, எங்கள் பகுதியில் உள்ள எட்டுக்கும் மேற்பட்டோரை கடித்துள்ளன.
குறிப்பாக, இரவு நேரங்களில் மட்டுமே இவை வெளியில் வருகின்றன. பகலில் வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன. ஒருவரின் தாடை பகுதியில் கடித்துள்ளன.
ஐந்துக்கும் மேற்பட்ட விலங்குகள் வருகின்றன. வனத்துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ''இதுகுறித்து வனச்சரகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக என்ன விலங்கு என்பதை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.