/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் இணைப்பில் ஆர்.சி.டி., பொருத்தம்: அறிவுறுத்தும் மின்வாரிய அதிகாரிகள்
/
மின் இணைப்பில் ஆர்.சி.டி., பொருத்தம்: அறிவுறுத்தும் மின்வாரிய அதிகாரிகள்
மின் இணைப்பில் ஆர்.சி.டி., பொருத்தம்: அறிவுறுத்தும் மின்வாரிய அதிகாரிகள்
மின் இணைப்பில் ஆர்.சி.டி., பொருத்தம்: அறிவுறுத்தும் மின்வாரிய அதிகாரிகள்
ADDED : அக் 26, 2025 08:46 PM
பொள்ளாச்சி: மின்பழுது மற்றும் மின்கசிவால் விபத்து ஏற்படுவதை தவிர்க்க, 'ஆர்.சி.டி' எனப்படும் 'ரெசிடியல் கரன்ட் டிவைஸ்' என்ற உபகரணத்தை மின் இணைப்பில் பொருத்திக் கொள்ள வேண்டும்' என, மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், இடி, மின்னல், மழையின் போது ஏற்படும் மின்கசிவு மற்றும் மின் பழுது காரணமாக விபத்து நேரிடுகிறது. இதை தவிர்க்க, அனைத்து மின்நுகர்வோரும் 'ஆர்.சி.டி.,' எனப்படும் உபகரணத்தை, அவரவர் மின் இணைப்பில் பொருத்திக் கொண்டால், விபத்து தவிர்க்க முடியும் என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
மின் இணைப்பில், இ.எல்.சி.டி., (எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்) எனப்படும் உபகரணம், ஏற்கனவே மின் இணைப்புகளில் பொருத்தப்பட்டு வந்தது. இருப்பினும், ஆங்காங்கே மின்கசிவு மற்றும் மின் பழுதால் மின் விபத்து நேரிடுவது தொடர்கிறது.
அந்த உபகரணத்தை காட்டிலும், கூடுதல் பலன் தரும், ஆர்.சி.டி., உபகரணம் பொருத்த மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த உபகரணத்தை மின் இணைப்பில் பொருத்திக் கொள்ளும் போது, மின்கசிவு மற்றும் மின்பழுதின் போது மின்சாரம் பாய்ந்தால், உடனடியாக அந்த மின் இணைப்பு தாங்கிய மீட்டர் (டிரிப்) செயலிழக்கும். இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்படும்.
புதிதாக மின் இணைப்பு பெறுவோர் உட்பட அனைவரும் கட்டாயம் ஆர்.சி.டி., உபகரணம் பொருத்திக் கொள்ள வேண்டும். சந்தையில், ஒருமுனை இணைப்புக்கான ஆர்.சி.டி., உபகரணம், 650 முதல், 2,000 ரூபாய்; மும்முனை மின் இணைப்புக்கான ஆர்.சி.டி.. 820 முதல், 5,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

