/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று பிறக்கிறது ஆடி: மின்வாரியத்தினர், வருவாய்த்துறையினர் உஷார்
/
இன்று பிறக்கிறது ஆடி: மின்வாரியத்தினர், வருவாய்த்துறையினர் உஷார்
இன்று பிறக்கிறது ஆடி: மின்வாரியத்தினர், வருவாய்த்துறையினர் உஷார்
இன்று பிறக்கிறது ஆடி: மின்வாரியத்தினர், வருவாய்த்துறையினர் உஷார்
ADDED : ஜூலை 16, 2025 10:43 PM

கோவை; ஆடி மாதம் இன்று துவங்க உள்ள சூழலில், கோவையில் குளிர் கலந்த சூறைகாற்று வீசத்துவங்கியுள்ளது. வருவாய்துறையினரும் மின்வாரியத்தினரும் 'அலர்ட்' ஆகியுள்ளனர்.
தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை உத்தராயண புண்ணிய காலம்; ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம். ஆன்மிக, சுப நிகழ்ச்சிகளை உத்தராயணத்திலும் சிலவற்றை தட்சிணாயத்திலும் காலத்திற்கேற்ப, பழங்காலத்திலிருந்தே நடத்துவது வழக்கம்.
தட்சிணாயன காலத்தில் அறிவியல் ரீதியாக, சூரியனின் கதிர்வீச்சு குறைவாக இருக்கும். இது உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். காற்றானது ஈரப்பதத்தை உறிஞ்சுவதால், உடலில் வறட்சி ஏற்படும். அதனால் பெரும்பாலான சுப காரியங்களை, தட்சிணாயனத்தில் நடத்துவதை தவிர்ப்பர்.
ஆடிமாதத்தில் வீசும் சூறாவளி காற்று, பலருக்கும் உடல் நலக்குறைவுகளை ஏற்படுத்தும். வானிலை ஆராய்ச்சியாளர்கள் அளித்துள்ள தகவலின் அடிப்படையில், கோவையில் எதிர்வரும் பத்து நாட்களுக்கு மணிக்கு, 30 கி.மீ., முதல் 40 கி.மீ.,வரை காற்று வேகமாக வீசும்.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், வருவாய்த்துறையினர், மின்வாரியத்தினர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் 'அலர்ட்' ஆக இருக்க வேண்டும் என, கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கலெக்டர் கூறுகையில், ''காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், ஆபத்தான மின்கம்பங்களை மாற்றவும், முறையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர், 'அலர்ட்' ஆக இருக்கவும், போன் அழைப்புகளை கவனத்துடன் கையாளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் 24 மணி நேரமும், 'அலர்ட்' ஆக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.