/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையோர கடைகளில் உணவு தேடிய யானை
/
சாலையோர கடைகளில் உணவு தேடிய யானை
ADDED : ஆக 06, 2025 10:05 PM

வால்பாறை; வால்பாறை அருகே, சாலையோர கடைகளில் நள்ளிரவில் உணவு தேடிய ஒற்றை யானையை கண்டு, வாகன ஓட்டுநர்கள் அமைதி காத்தனர்.
வால்பாறையில் பருவமழைக்கு பின் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக, வில்லோனி, சிறுகுன்றா, சோலையாறு, கல்லார், புதுத்தோட்டம் உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள புதுத்தோட்டம் எஸ்டேட்டில் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக ஒற்றையானை முகாமிட்டு, தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் பயிரிடப்பட்ட வாழை, பலா, கொய்யா போன்றவைகளை உணவாக உட்கொள்கிறது.
இந்நிலையில், ஒற்றை யானை நேற்று முன்தினம் இரவு அய்யர்பாடி மருத்துவமனையின் முன்பாக, சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் துதிக்கையை விட்டு உணவு தேடியது.
அப்போது, ரோட்டில் யானை நிற்பதை கண்ட அரசு பஸ் மற்றும் பிற சுற்றுலா வாகனங்களை நிறுத்தி சற்று நேரம் அமைதி காத்தனர். சிறிது நேரத்திற்கு பின் யானை சாலையோரம் இருந்த தேயிலை காட்டில் இறங்கி நின்றது. அதன்பின் வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் வாகனங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.