ADDED : ஆக 12, 2025 08:53 PM

வால்பாறை; தொழிலாளர் வீடுகளை சேதப்படுத்திய யானைகளை விரட்ட முடியாமல், வனத்துறையினர் தவித்தனர்.
வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக, ஊசிமலை, நல்லமுடி, அக்காமலை பாலாஜி கோவில் அருகில், வாகமலை, முத்துமுடி, வில்லோனி, வெள்ளமலை உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டுள்ளன.
பகல் நேரத்தில் சோலைக்காடுகளில் இருக்கும் யானைகள், இரவு நேரத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு வருகின்றன.
இந்நிலையில், நல்லமுடி எஸ்டேட்டில் முகாமிட்டுள்ள மூன்று யானைகள், நேற்று முன்தினம் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் புதுந்து, சக்தி, செல்லத்துரை, மூர்த்தி உள்ளிட்ட நான்கு வீடுகளை சேதப்படுத்தியதோடு, துதிக்கையை விட்டு உணவு பொருட்களை தேடின.
இதனால் வீட்டில் துாங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமலும், உள்ளே இருக்க முடியாமலும் தவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். காலை, 4:00 மணிக்கு யானைகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றன. யானைகள் நடமாட்டத்தால் தொழிலாளர்கள் விடிய, விடிய துாக்கமின்றி அச்சத்துடன் தவித்தனர்.

