/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டத்து வீடுகளை நோக்கி படையெடுக்கும் யானைகள்
/
தோட்டத்து வீடுகளை நோக்கி படையெடுக்கும் யானைகள்
ADDED : ஜன 21, 2025 11:43 PM

பெ.நா.பாளையம்; கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாக சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், பாப்பநாயக்கன்பாளையம், வரப்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் தோட்டத்து வீடுகளில் வைக்கப்பட்டு இருந்த தவிடு மற்றும் புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களை காட்டு யானைகள் தின்று வந்தன.
அவற்றை விரட்டும் நடவடிக்கையில் தினசரி கோவை சரக வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது, அப்பகுதியில் இருந்து நான்குக்கும் மேற்பட்ட யானைகள் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட நாயக்கன்பாளையம், கூடலூர், பூச்சியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளன. நேற்று அதிகாலை நாயக்கன்பாளையம் பகுதியில் தோட்டத்து சாளையில் உள்ள தீவனங்களை மூன்று யானைகள் தின்றன. வீட்டுக்குள் இருந்த பெரியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கடந்த வாரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் இறந்தார்.
இந்நிலையில், நாயக்கன்பாளையம், கூடலூர் நகராட்சி பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், இரவு நேரங்களில் அப்பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
காட்டு யானைகளை மலையடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தி, வனப்பகுதிக்குள் திருப்பும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.