/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலித்தீன் கவரில் சுற்றுச்சூழல் 'பார்சல்...!' அபாயம் வளர்க்கும் 'எதிரிகள்': அசால்ட்டாக அதிகாரிகள்!
/
பாலித்தீன் கவரில் சுற்றுச்சூழல் 'பார்சல்...!' அபாயம் வளர்க்கும் 'எதிரிகள்': அசால்ட்டாக அதிகாரிகள்!
பாலித்தீன் கவரில் சுற்றுச்சூழல் 'பார்சல்...!' அபாயம் வளர்க்கும் 'எதிரிகள்': அசால்ட்டாக அதிகாரிகள்!
பாலித்தீன் கவரில் சுற்றுச்சூழல் 'பார்சல்...!' அபாயம் வளர்க்கும் 'எதிரிகள்': அசால்ட்டாக அதிகாரிகள்!
ADDED : மே 21, 2025 11:54 PM

அபரிமிதமான பிளாஸ்டிக் பயன்பாடால், சுற்றுச்சூழல் பாதிக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணை மலடாக்குகிறது. பெய்யும் மழை நீர் நிலத்துக்குள் இறங்குவதை தடுப்பதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கிறது.
கடந்த, 2019ம் ஆண்டு முதல், பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பிளாஸ்டிக் கேரி பேக், ஓட்டல்களில் உணவு பொருட்களை பார்சல் செய்யும் பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் டைனிங் டேபிள் விரிப்பு, பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் தட்டுக்கள், பிளாஸ்டிக் பூச்சு உள்ள பேப்பர் பிளேட் மற்றும் கப், பிளாஸ்டிக் டம்ளர், ஸ்ட்ரா, பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கோட்டிங் தண்ணீர் டம்ளர்கள், உணவு தட்டுக்கள், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட பேப்பர் பைகள், நான்-ஓவன் பேக் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு இருந்தால், 10 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். நிறுவனங்கள், கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில், முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் ஒருமுறை பயன்படுத்தும் கேரி பேக் உள்ளிட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில், மஞ்சள் பை திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்; விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
ஆரம்ப காலத்தில் சுறுசுறுப்பாக இருந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள், தற்போது படிப்படியாக குறைந்து விட்டது. பயன்பாட்டை கட்டுப்படுத்த இருந்த கெடுபிடிகளும் இல்லாததால், மீண்டும் பிளாஸ்டிக் ஆதிக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது.
அபராதம் விதிப்பு, பிளாஸ்டிக் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவ்வப்போது எடுத்தாலும் அதன் பயன்பாடு முற்றிலும் கட்டுப்படுத்த முடியாமல் அரசுத்துறை அதிகாரிகள் திணறுகின்றனர்.
கால்வாய்களில் அடைப்பு
பொள்ளாச்சி நகரம், கிராமங்களில், பிளாஸ்டி கவர், டம்ளர், தண்ணீர் பாட்டில் போன்றவை ரோட்டோரங்களில் வீசப்படுகிறது. அவை மழைநீர் வடிகால் கால்வாய்கள், நீரோடைகளை சென்றடைவதால், மழை காலங்களில் மழைநீர் வெளியேறுவதில் பெரும் இடையூறு ஏற்பட்டு, ரோட்டில் மழை வெள்ளம் செல்கிறது.
கிணத்துக்கடவு பகுதியில் மளிகை கடையில் துவங்கி, ஹோட்டல் மற்றும் பேக்கரிகள் வரை அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் கவர் பயன்பாடு உள்ளது. பிளாஸ்டிக் கவர்களில் சூடான உணவு டீ, சாம்பார் உள்ளிட்ட உணவு பொருட்களை பார்சல் செய்யும் போது, உணவு பொருட்களில் பாதிப்பு ஏற்படுகிறது.
உடுமலை நகராட்சி பகுதிகளில், பிளாஸ்டிக் தடை இருந்தாலும், பயன்பாடு அபரிமிதமாக உள்ளதற்கு, வெளியேறும் கழிவுகளே சாட்சியாக உள்ளது. அதிகாரிகள் அலட்சியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததே பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்புக்கு காரணம்.
தீ வைப்பு
கிராமங்களில் குப்பை தரம் பிரித்து பெறுவதில்லை. பாலித்தீன் பயன்பாட்டை கண்காணித்து எந்த துறையினரும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், காணுமிடம் எல்லாம், பிளாஸ்டிக் கழிவு குவிந்து கிடக்கிறது. ஊராட்சி நிர்வாகத்தினரே, பிளாஸ்டிக் கழிவை பிற கழிவுகளுடன் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
கால்நடைகள் பாதிப்பு
ரோட்டில் மேய்ச்சலுக்காக சுற்றும் மாடு உள்ளிட்ட கால்நடைகள், குப்பை கழிவுகளுக்குள் பிளாஸ்டிக் கவரில் வீசப்படும் காய்கறி, உணவு கழிவை உட்கொள்கின்றன. கால்நடைகளின் உணவுக்குழாயில் பிளாஸ்டிக் கழிவு அடைத்துக் கொண்டால், உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
தீர்வு தேவை!
பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் கட்டுப்படுத்த, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடை உரிமையாளர்கள், பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகளை தெரிவித்து மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அரசு அலுவலகம், பள்ளி, கல்லுாரி வளாகங்களில் பிளாஸ்டிக் தடை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
- நிருபர் குழு -

