காலிபாட்டில் பெறுவதில் சிக்கல் ‘டாஸ்மாக்’ திறப்பதில் தாமதம்
காலிபாட்டில் பெறுவதில் சிக்கல் ‘டாஸ்மாக்’ திறப்பதில் தாமதம்
ADDED : நவ 02, 2026 12:49 AM
கோவை: ‘டாஸ்மாக்’ கடைகளில் மது பாட்டிலின் அதிகபட்ச சில்லரை(எம்.ஆர்.பி.) விலையிலேயே காலி பாட்டில்கள் திரும்ப பெறுவதற்கான ரூ.10 சேர்க்கப்படுவதால், நுகர்வோரிடம் தனியாக ரூ.10 வசூலிக்கும் நடைமுறை நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலி பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தில் இருக்கும் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வுகாணக்கோரி டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன் ஊழியர்கள் நேற்று திரண்டனர். இதனால் மாவட்டத்தில் காலை 12:00 மணிக்கு திறக்க வேண்டிய 215 கடைகளும் மூடப்பட்டிருந்தன.
‘காலிபாட்டில்களை திரும்ப பெறுவதற்கு தனி ஆட்கள் நியமிக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், பெறப்படும் பாட்டில்களை வைப்பதற்கு இடமில்லை. பாட்டில்கள் உடைந்தாலும் நாங்கள்தான் பொறுப்பு. எனவே, இதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வுகாணுமாறு, வடக்கு மேலாளர் உள்ளிட்டோரை சந்தித்து முறையிட்டோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்’ என, டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இரண்டு மணி நேரம் தாமதமாக மதியம் 2:00க்கு கடைகள் திறக்கப்பட்டன. பொறுமை இழந்த ‘குடி’மகன்கள் மசக்காளிபாளையம் உள்ளிட்ட இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
