/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப்பன்றி தாக்கி விவசாயி காயம்
/
காட்டுப்பன்றி தாக்கி விவசாயி காயம்
ADDED : பிப் 13, 2025 11:25 PM

பெ.நா.பாளையம்; சின்னதடாகம் வட்டாரத்தில் காட்டு பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நள்ளிரவில் காட்டுப்பன்றி தாக்கி விவசாயி ஒருவர் காயமடைந்தார்.
சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், மடத்தூர், ராமநாதபுரம், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுபன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காட்டு பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், அதை கொல்லவும், தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வனப்பகுதியில் இருந்து, 3 கி.மீ., க்குள் காட்டு பன்றிகளை பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விடவும், 3 கி.மீ., மேல் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரியும் காட்டு பன்றிகளை துப்பாக்கியால் சுட்டு கொல்லவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பயிற்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறையினருக்கு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இத்திட்டத்தில் வனத்துறையினர் ஒரு பன்றியை கூட பிடிக்கவோ அல்லது சுடவோ இல்லை.
இந்நிலையில் சின்னதடாகம் வட்டாரத்தில் நள்ளிரவில் விவசாயி ஒருவரை காட்டுப்பன்றி தாக்கியதில், அவர் காயம் அடைந்தார்.
சின்னதடாகம் அருகே உள்ள விவசாயி நந்தகுமார், 57, நள்ளிரவில் தனது தோட்டத்துக்கு காட்டு யானைகள் வந்திருப்பதாக கருதி, வனத்துறையினரை அழைத்தார். வனப்பணியாளர்கள் ரோந்து வாகனம் வாயிலாக தோட்டத்துக்கு வந்தனர். வாழை சேதம் ஆகியுள்ளது.
ஆனால், யானையை காணவில்லை என பேசிக்கொண்டு இருந்தபோது, சற்று தொலைவில் இருந்த காட்டுப்பன்றி, கண் இமைக்கும் நேரத்தில் விவசாயி நந்தகுமாரை முட்டி, அவரை கீழே தள்ளியது. அருகில் இருந்த வனத்துறையினர் உடனடியாக அவரை மீட்டு தடாகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, கால் முட்டியில், 11 தையல்களை போட்டு மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
இது குறித்து சின்னதடாகம் வட்டார விவசாயிகள் கூறுகையில்,' அபரிமிதமாக பெருகிவரும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல வனத்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், விவசாயிகள் காயம் மற்றும் உயிரிழப்புகளை சந்திக்க நேரிடும்' என்றனர்.