/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
/
மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜன 29, 2024 11:30 PM
சூலுார்:'பயிர்களுக்கு தேவையான உரங்களை இட, மண் பரிசோதனை செய்ய முன் வரவேண்டும்,'என, வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து சூலூர் மற்றும் சுல்தான்பேட்டை வட்டார வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது :
மண்ணில், அதிகளவில், அமில, கார, உவர் நிலையில்லாமல், நல்ல வடிகால் வசதியுடன் இருக்கும் மண்ணே நல்ல வளமான மண்ணாகும். உயர் விளைச்சல் தரும் வீரிய ரகங்களை தொடர்ந்து சாகுபடி செய்வதால், அதிகளவு சத்துக்கள் மண்ணில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ரசாயன உரங்கள் மட்டுமே அதிகளவில் தொடர்ந்து பயிர்களுக்கு இடப்படுவதால், மண்ணின் தன்மை பெருமளவு பாதிக்கப்படுகிறது. தொழு உரம், பசுந்தாள் உரம், தழை உரம் ஆகியவற்றை போதிய அளவு இடாததால், மண் வளம் குறைந்து விடுகிறது. மண்ணில் என்ன சத்துக்கள் அதிகமாக உள்ளன, எவை குறைவாக உள்ளன என்பதை அறிந்து கொள்ள மண் பரிசோதனை அவசியம்.
அதில் கிடைக்கும் முடிவுகளின் படி, தேவையான உரங்களை மட்டும் பயன்படுத்தலாம். தேவையில்லாத உரங்களை தவிர்த்துவிடலாம்.
மண் பரிசோதனைக்கான வழிகாட்டுதல்கள் வட்டார வேளாண் அலுவலகத்தில் வழங்கப்படும். விவசாயிகள் அனைவரும் மண் பரிசோதனை செய்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.