/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
273 நாட்கள் தொடரும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்; நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு
/
273 நாட்கள் தொடரும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்; நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு
273 நாட்கள் தொடரும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்; நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு
273 நாட்கள் தொடரும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்; நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு
ADDED : ஆக 20, 2025 09:47 PM

சூலுார்; விளை நிலங்கள் வழியே எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 273 நாட்களாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் தேவனஹள்ளி வரை, 350 கி.மீ., தூரத்துக்கு, பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின், ஐ.டி.பி.எல்., நிறுவனம் எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டத்தை துவங்கியது.
இதில், இருகூர் முதல் திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை, 70 கி.மீ., தூரத்துக்கு, விளைநிலங்கள் வழியாகவும், மற்ற பகுதிகளில், நெடுஞ்சாலை ஓரமாகவும் குழாய் பதிக்க திட்டமிடப்பட்டது. இதற்கு கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் பணிகளை அந்நிறுவனம் துவக்கியது.
இதனால், ஆவேசமடைந்த இரு மாவட்ட விவசாயிகள், பணிகளை தடுத்து நிறுத்தி முற்றுகை, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். பாதிக்கப்படும் விவசாயிகள் தங்கள் ஊர்களில் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.
இதற்கிடையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர், துறை செயலர், மாவட்ட அமைச்சர்கள், கலெக்டர்களை சந்தித்து சாலை ஓரமாக குழாய்களை அமைக்கும் மாற்று திட்டத்தை வலியுறுத்தினர். பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஆனால், கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதனால், விரக்தி அடைந்த விவசாயிகள், அவிநாசி பாளையத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். நேற்றுடன், 273 நாட்கள் முடிந்த நிலையில் எந்த தீர்வும் எட்டப்படாமல் உள்ளது.
இதுகுறித்து ஐ.டி.பி.எல், திட்ட மாற்று வழி குழு ஒருங்கிணைப்பாளர்களான சூலுாரை சேர்ந்த விவசாயி கணேசன், ரவிக்குமார் ஆகியோர் கூறியதாவது: எங்களின் வாழ்வாதாரமே விவசாயம் தான். இருக்கும் நிலத்தையும் இரண்டு துண்டுகளாக்கி, குழாய் பதிப்போம் என்கின்றனர். ஏற்கனவே விவசாயத்தில் வருமானம் இல்லாமல் தவிக்கிறோம். வங்கியில் கடன் வாங்க முடியவில்லை. மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சரிடம் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தினோம். சாலை ஓரமாக குழாய் பதிக்க மாநில அரசு கடிதம் கொடுத்தால், நாங்கள் திட்டத்தை மாற்றி அமைக்க தயாராக உள்ளோம், என, கூறினார்.
ஆனால், மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. இதையடுத்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். உடுமலை வந்த முதல்வரை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம். உரிய முறையில் பரிசீலிக்கிறோம், எனக்கூறினார். மாற்றுத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் முடிவில் உள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.