/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடைகளை சேதப்படுத்திய ஒற்றை யானையால் அச்சம்
/
கடைகளை சேதப்படுத்திய ஒற்றை யானையால் அச்சம்
ADDED : அக் 15, 2025 11:13 PM

வால்பாறை: வால்பாறையில் ரோட்டோர கடைகளை சேதப்படுத்திய ஒற்றை யானையால் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.
வால்பாறையில் பருவமழைக்கு பின், வன வளம் பசுமையாக காணப்படுவதால், யானைகள் இடம்பெயர்ந்து வருவது அதிகரித்துள்ளது. வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டுள்ளன.குறிப்பாக, நல்லமுடி, குரங்குமுடி, வெள்ளமலை, சிறுகுன்றா, பாரளை, வாட்டர்பால்ஸ், தாய்முடி உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட ஒற்றை யானை, கூழாங்கல்ஆறு பகுதியில், சாலையோர கடைகளை நேற்று அதிகாலை சேதப்படுத்தி, உள்ளே இருந்த உணவு பொருட்களை சாப்பிட்டது.
தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று அரை மணி நேர போராட்டத்துக்கு பின், யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சுற்றுலா பயணியர் வசதிக்காக, சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றையொட்டியுள்ள ரோட்டோரத்தில் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. யானைகள் நடந்து செல்லும் வழித்தடத்தில் இந்த கடைகள் அமைந்துள்ளதால், அடிக்கடி சேதப்படுத்துகின்றன.
மாலை நேரத்தில் கடைகளை அடைக்கும் போது, உள்ளே இருக்கும் பொருட்களை வியாபாரிகள் எடுத்து செல்ல வேண்டும். பொருட்களை கடைக்குள் வைப்பதை தவிர்க்க வேண்டும். மாலை ஆறு மணிக்கு முன்பாகவே கடைகள் அடைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.