ADDED : அக் 23, 2026 08:00 PM
மேட்டுப்பாளையம்: பெள்ளாதி குளத்தில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியம், பெள்ளாதி ஊராட்சியில், 100 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்தில் தற்போது தண்ணீர் நிறைந்துள்ளது. ஆனால் மீன் பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து மீனவர் நடராஜ் கூறியதாவது: பெள்ளாதி குளத்தில் தண்ணீர் நிறைந்து இருப்பதால், சிலேபி, ரோகு, மிருகால், அவிரி ஆகிய மீன் வகைகள் உள்ளன. இந்த குளம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 200க்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்கள் பிடித்து வருகின்றனர். மீன்கள் ஓரளவு கிடைத்து வருவதால், மீனவர்களுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
தற்போது குளத்தில் ஆகாயத் தாமரை அதிகளவில் வளர்ந்துள்ளது. இதனால் மீன்பிடி வலைகள் போட முடியாமல் உள்ளன. அடிக்கும் காற்றால், தண்ணீரில் போட்ட வலைகளில், ஆகாயத் தாமரையில் சிக்கிக் கொள்கின்றன. இதில் வலைகள் சேதம் அடைவதோடு, மீன்கள் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள், பெள்ளாதி குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
