/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
58 சவரன் திருட்டு வழக்கில் பெண் உட்பட ஐவர் கைது
/
58 சவரன் திருட்டு வழக்கில் பெண் உட்பட ஐவர் கைது
ADDED : ஜன 01, 2025 05:26 AM

கோவை : கோவை, வடவள்ளி பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில், பெண் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, வடவள்ளி பெரியார் நகர், 5-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார், 53; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். மனைவி கலைவாணி, 50; வடவள்ளி மாநகராட்சி பள்ளியில் ஆசிரியை. இவர்களின் வீட்டில் கடந்த 20ம் தேதி, மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 58 சவரன் தங்கம், ரூ.1.5 லட்சம் பணம் திருடிச்சென்றனர்.
ரமேஷ் குமார் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். போலீசார் தனிப்படைகள் அமைத்து, வடவள்ளியை சேர்ந்த மோகன கிருஷ்ணன், 27, கேரளாவை சேர்ந்த பிரவீன் 42, சையூபுதீன், 42, வடவள்ளியை சேர்ந்த தினேஷ் குமார், 31, தேவிகா, 30 ஆகியோரை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
தேவிகா, வடவள்ளி பெரியார் நகரில் ரமேஷ் வீட்டின் அருகில் உள்ள, ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார். ரமேஷ் வீட்டில் நகைகள், பணம் நிறைய இருப்பதாக, வடவள்ளி பகுதியில் செல்போன் கடை நடத்தி வரும் மோகன கிருஷ்ணனிடம், தேவிகா தெரிவித்துள்ளார்.
மோகன கிருஷ்ணன், தனது நண்பரான பிரவீன், சையூபுதீன், தினேஷ் ஆகியோர் இணைந்து, கடந்த 20ம் தேதி மதியம் ரமேஷ் வீட்டில் இருந்து வெளியில் சென்றதை, நோட்டமிட்டு திருட்டை அரங்கேற்றியுள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
போலீசார் கைது செய்தவர்களிடம் இருந்து, 40 சவரன் தங்க நகைகளை மீட்டனர். ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

