/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடையை வரவேற்கும் சரக்கொன்றை மலர்கள்
/
கோடையை வரவேற்கும் சரக்கொன்றை மலர்கள்
ADDED : ஏப் 01, 2025 10:13 PM

பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி நகரின் பல இடங்களில், மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும், சரக்கொன்றை மலர்கள், காண்போரை பரவசமடைய செய்கிறது.
சித்திரை முதல்நாள், விஷு என அழைக்கப்படுகிறது. அதனை வரவேற்க, முந்தைய நாள் இரவே, தட்டில் அரிசியை பரப்பி, நவதானியம், நகை, புத்தகம், தேங்காய், கொன்றை மலர், காய், கனி வகைகளை அடுக்கி, பூஜை அறையில் வைக்கப்படும்.
அதிகாலையில் அந்த பொருட்களில் கண் விழிப்பர். இதை, விஷு கனி காணுதல் என, கேரளா மாநில மக்கள் கொண்டாடுகின்றனர்.
ஆண்டு துவக்கத்தில் மங்கள பொருட்களை காண்பதால், ஆக்கபூர்வமான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். அதில், 'காசியா பிஸ்டுலா' என்று அழைக்கப்படும் சரக்கொன்றை பூக்கள் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவ்வகையில், தற்போது, பொள்ளாச்சி நகரின் பல இடங்களில், மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கி காண்போரை பரவசமடையச் செய்கிறது.
தன்னார்வலர்கள் கூறுகையில், 'ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சரக்கொன்றை மரங்களில் அதிக அளவில் கொன்றை பூக்கள் பூத்துக் குலுங்கும். இந்த மரம், வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது.
மஞ்சள் நிறத்தில் ரம்மியமாக காட்சியளிக்கும் கொன்றை பூக்களை பலரும் ரசித்து செல்கின்றனர். சிலர் போட்டோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு கோடையை வரவேற்கும் மலர் மலர்ந்தது, என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு, கூறினர்.

