/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயிரி பொருளாதாரத்தில் கவனம் செலுத்தினால் வேளாண்மையில் சாதனைகள் படைக்க முடியும்
/
உயிரி பொருளாதாரத்தில் கவனம் செலுத்தினால் வேளாண்மையில் சாதனைகள் படைக்க முடியும்
உயிரி பொருளாதாரத்தில் கவனம் செலுத்தினால் வேளாண்மையில் சாதனைகள் படைக்க முடியும்
உயிரி பொருளாதாரத்தில் கவனம் செலுத்தினால் வேளாண்மையில் சாதனைகள் படைக்க முடியும்
ADDED : அக் 23, 2025 11:54 PM

கோவை: கரும்பு இனப்பெருக்க நிறுவனம் போன்ற வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், ஜி.டி.பி.யில் உயிரி பொருளாதாரத்தின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என, வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரிய தலைவர் சஞ்சய்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓர் அங்கமான, கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் 114வது நிறுவன நாள் விழா, கோவையில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, கரும்பு இனப்பெருக்க நிறுவன தலைவர் கோவிந்தராஜ் பேசியதாவது: இந்நிறுவனம் 1912ல் பார்பர் என்பவரால் துவக்கப்பட்டது. இதன் முதல் கரும்பு ரகம் 1918ல் வெளியிடப்பட்டது. 1925ல் இருந்து தற்போது வரை இந்த நூறாண்டுகளில் ஏராளமான கரும்பு ரகங்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மொத்த கரும்பு சாகுபடி பரப்பில் 80 சதவீதம் இந்நிறுவனத்தின் உருவாக்கம்தான். உலகின் கரும்பு சாகுபடி செய்யும் முக்கிய 27 நாடுகளில் இந்நிறுவனத்தின் கரும்பு ரகம், வர்த்தக ரீதியாகவோ அல்லது ஒட்டுரகத்தை உருவாக்குவதற்கான பெற்றோர் ரகமாகவோ பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு கோவிந்தராஜ் பேசினார்.
மத்திய அரசின், வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரிய தலைவர் சஞ்சய்குமார் பேசியதாவது:
விவசாயிகளின் தேவையைப் புரிந்து கொண்டு, வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். காலமாற்றத்துக்கேற்ப நாம் நம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சரியான பயிர், விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக மாறக்கூடும். புதிய பயிர்களை, சாகுபடி முறைகளை அவற்றுக்கான வினியோகச் சங்கிலியுடன் அறிமுகம் செய்தால் விவசாயிகள் செழிப்படைவர்.
ஹிமாச்சலில் காட்டு செவ்வந்தி அறிமுகம் செய்தோம். நறுமண எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டில் 8 டன்கள் வரை உற்பத்தியாகிறது. முதன்முறையாக இந்தியாவில் பெருங்காய தாவர சாகுபடியை சாத்தியப்படுத்தினோம்.
இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி- ஜி.டி.பி.யில் உயிரி பொருளாதாரத்தின் பங்களிப்பு 4.25 சதவீதம். இந்த துறையில் நாம் கவனம் செலுத்தலாம். கரும்பு சார்ந்த உயிரி பொருளாதாரத்தின் பங்களிப்பை நோக்கி நாம் நகர வேண்டும். இதை நோக்கி நம் ஆய்வுகள் அமைவது, விவசாயிகள், தொழில்துறையினர், ஜி.டி.பி. என அனைத்துக்கும் பலனளிப்பதாக இருக்கும். இவ்வாறு, சஞ்சய்குமார் பேசினார்.
நிகழ்ச்சியில், கரும்பு இனப்பெருக்க நிறுவன விஞ்ஞானிகள், பணியாளர்களுக்கு அவர்களின் சிறப்பான சேவையைப் பாராட்டி, நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், புதிய சிற்றாய்வு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன.
தேசிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் தங்கவேலு, பயிர்பாதுகாப்பு பிரிவு தலைவர் ரமேஷ் சுந்தர், இனப்பெருக்க பிரிவு தலைவர் அலமேலு, விஞ்ஞானிகள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.

