ADDED : மார் 19, 2025 08:31 PM

அரசு மருத்துவமனைகளுக்கு...
- நிருபர் குழு -
பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனை, நான்கு ஏக்கர் 19.50 சென்ட் பரப்பளவில், கடந்த, 1934ல் துவங்கப்பட்டது. 1975ல் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது.நகர மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள், மலைவாழ் மக்கள், கேரள எல்லையோரத்தில் வாழும் மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
மாவட்ட மருத்துவமனையாக கடந்த 2009ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டாலும்,வசதிகள் இன்னும் மேம்படுத்தப்படாமல் உள்ளது.தற்போது, 462 படுக்கைகளுடன் செயல்படுகிறது; தினமும் 1,500 வெளிநோயாளிகள், 450 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக மூவாயிரம் பிரசவங்கள் நடக்கிறது. இதுதவிர, மாதத்துக்கு 500 பெரிய அறுவை சிகிச்சைகள், ஆயிரம் சிறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.
டாக்டர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கை, 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.காலி பணியிடங்களை நிரப்ப அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
டாக்டர்கள், 34 பேர் இருந்தாலும், அடிக்கடி மாற்றுப்பணிக்கு செல்வதால், இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சம்பந்தப்பட்ட டாக்டர்கள் வாயிலாக சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எலும்பு முறிவு, நரம்பியல், இருதய அறுவை சிகிச்சை, குழந்தை அறுவை சிகிச்சை, கேன்சர் பிரிவு டாக்டர் இல்லாததால், அறுவை சிகிச்சை நடைபெறுவதில்லை.
மருந்தாளுநர்கள், 12 பேர் இருக்க வேண்டிய நிலையில், இரண்டு பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.இதனால், நோயாளிகள் மருந்து வாங்க 'கால் கடுக்க' காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எக்ஸ்ரே லேப் டெக்னீஷியன், ரேடியாலஜி பணியாளர்கள் கூடுதலாக நியமிக்காததால், ரிப்போர்ட் வழங்குவது தாமதமாகிறது. சி.டி.ஸ்கேன் 'டெக்னீசியன்' பற்றாக்குறையால் 24 மணி நேரமும் செயல்படுவதில்லை.
ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் இல்லாததால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யும் மையமாக, அரசு மருத்துவமனை செயல்படுகிறது.
கழிவுகள் தேக்கம்
தினமும், சராசரியாக 100 கிலோ மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இதுதவிர, பொது கழிவுகளை நகராட்சி நிர்வாகம் முறையாக அகற்றாத சூழலில், மூட்டை, மூட்டையாக தேங்கி கிடக்கிறது. அவை முறையாக அகற்ற நடவடிக்கை எடுத்தால் சுகாதாரத்தை பாதுகாக்கலாம்.
நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் அமர போதிய வசதியில்லாததால், மருத்துவமனை வளாகத்தில் உள்ள தரையில் அமர்ந்து காத்திருக்கின்றனர். பொதுமக்கள், நோயாளிகளின் வாகனங்கள் மருத்துவமனை வளாகத்தினுள் அனுமதிக்கப்படுவதில்லை. மருத்துவமனை நுழைவாயில் முன், பிரதான சாலையோரம் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவதால், பொது போக்குவரத்து பாதிக்கிறது.
தீர்வு கிடைக்குமா?
நோயாளிகளை வீல்சேர், ஸ்டக்சரில் அழைத்து செல்வதில் துவங்கி, ஊசி போடும் இடம், மருந்து பெறும் இடம், வார்டு பகுதிகள் என, எந்த இடத்திலும் கனிவான பேச்சுக்கு இடமில்லை. ஏழ்மையில் இருப்பவர்கள், உடலில் வேதனைகளோடு அரசு மருத்துவமனையே கதியென சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களிடம், ஆக்ரோஷ குணத்தை காண்பிப்பதால், மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
பிரசவ வார்டில், 'கவனிப்பு' செய்தால், உபசரிப்பு கிடைக்கும். இல்லையெனில், சிகிச்சை பெறுவோர், அட்டெண்டர்களிடம் பேசும் விதமே வேறுமாதிரி இருக்கிறது. விபத்து சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சைக்கு வருவோரை, இங்குள்ள ஊழியர்களே தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர். இவற்றை தவிர்க்கவும், ஏழை எளிய மக்களுக்கு உரிய சிகிச்சை உரிய நேரத்தில் கிடைக்கவும், அரசு மருத்துவமனையில் போதிய வசதிகளை ஏற்படுத்துவது அவசியம். பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை அளிக்க அரசு முன்வரவேண்டும்.