/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவைக்கு அழைப்பு விடுக்கும் வெளிநாடுகள்
/
கோவைக்கு அழைப்பு விடுக்கும் வெளிநாடுகள்
ADDED : செப் 30, 2025 10:56 PM
கோவை மக்களின் தொழில்முனைவுத் திறன் மீது உலக அளவில் அபாரமான மரியாதை உள்ளது. எனவே, வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளும் கோவை நிறுவனங்களை தங்களது பகுதியில் வந்து தொழில் துவங்க அழைப்பு விடுத்து வருகின்றன.
உதாரணமாக மொரீஷியஸ் போன்ற நாடுகள், ஏராளமான சலுகைகளை வழங்கி, கோவை தொழில்முனைவோர்க்கு அழைப்பு விடுக்கின்றன. இதுதொடர்பாக, வெளிநாடுகளின் வர்த்தக குழுவினர், கோவையில் வர்த்தக மாநாடுகளை நடத்துகின்றன.
மொரீஷியஸில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கும், மொரீஷியஸுக்கும் இடையே வர்த்தக உறவு நீண்ட காலமாக இருக்கிறது. இந்தியாவில் இருந்து 315 விதமான பொருட்கள் மொரீஷியஸுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தீவு நாடான மொரீஷியஸ், ஆப்பிரிக்க நாடுகளுக்கு நுழைவாயிலாக உள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 52 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தை போட்டுள்ளது. எனவே, கோவை தொழில்முனைவோர் அங்கு தொழில் துவங்கினால், அங்கிருந்து ஏற்றுமதி செய்வது சுலபமாகும்.
இந்தியாவில் இருந்து நேரடியாக ஏற்றுமதி செய்ய இயலாதவற்றை அங்கிருந்து எளிதில் ஏற்றுமதி செய்யலாம். மேலும், தங்களது நாட்டில் தொழில் துவங்குவதற்கான அனுமதி ஒரே நாளில் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட சலுகைகளை வழங்கி, கோவை தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது, கோவை மக்களின் தொழில்முனைவுத் திறனுக் கு கிடைத்த பெரும் பாராட்டாகும்.