/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளியங்கிரி மலையில் மரக்கன்று நட்ட பக்தர் நடவடிக்கை பாயும் என வனத்துறை எச்சரிக்கை
/
வெள்ளியங்கிரி மலையில் மரக்கன்று நட்ட பக்தர் நடவடிக்கை பாயும் என வனத்துறை எச்சரிக்கை
வெள்ளியங்கிரி மலையில் மரக்கன்று நட்ட பக்தர் நடவடிக்கை பாயும் என வனத்துறை எச்சரிக்கை
வெள்ளியங்கிரி மலையில் மரக்கன்று நட்ட பக்தர் நடவடிக்கை பாயும் என வனத்துறை எச்சரிக்கை
ADDED : மார் 28, 2025 03:08 AM
கோவை: வனப்பகுதிக்குள், வனத்துறை அனுமதி இன்றி மரக்கன்றுகளை நடவு செய்வது, சூழல் சமநிலையைக் குலைக்கும். எனவே, அத்தகு செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச் சரகத்துக்கு உட்பட்ட வெள்ளியங்கிரிக்கு பக்தர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வெள்ளியங்கிரியின் 7வது மலையின், புல்வெளிப் பகுதியில், திருநெல்வேலியைச் சேர்ந்த நபர் ஒருவர், தான் கொண்டு வந்திருந்த அத்தி மரக்கன்றை நடவு செய்தார். இதை வீடியோவாக எடுத்து, மற்றவர்களும் இதுபோன்று செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.
மலை, வனத்தின் இயற்கை அமைப்பைப் புரிந்து கொள்ளாமல், ஆர்வக் கோளாறு காரணமாக சிலர் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். புல்வெளிகளுக்கு என்று ஓர் சூழலியல் கட்டமைப்பும், தேவையும் உள்ளது.
அதைப் புரிந்துகொள்ளாமல், அச்சூழலுக்கு ஒவ்வாத, அந்நிய மரங்களை நடுவது, வனத்துக்கு இடையூறாகவே அமையும். எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சூழலியல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, அங்கு நடப்பட்ட அத்திமரக்கன்றை வனத்துறையினர் அகற்றினர்.
இதுதொடர்பாக, கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறியதாவது:
வெள்ளியங்கிரி மலையில், வனத்துறை அனுமதியின்றி நடப்பட்ட அந்நிய மரம் உடனடியாக அகற்றப்பட்டது. மலைக்கு வரும் பக்தர்கள் இதுபோன்ற செயல்களைச் செய்யக்கூடாது.
இந்தச் சூழலுக்கு ஒவ்வாத எந்தவொரு பொருளையும் பக்தர்கள் உடன் எடுத்து வரக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டும்தான் பக்தர்கள் செல்ல வேண்டும். மாற்றுப் பாதைகளில் செல்லக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்வதைத் தவிர்க்கவும்.
பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிக்குள் போடக்கூடாது. மலையேறும் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு உணவளிக்கக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது. அனுமதியின்றி வனப்பகுதிக்குள் மரக்கன்றுகள் நடவு செய்தல், மரங்களை சேதப்படுத்துதல், கொடியேற்றுதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது.
வெள்ளியங்கிரி 6வது மலை ஆண்டி சுனையில் குளித்துவிட்டு, ஈரத்துணிகளை அங்கேயே போட்டுவிட்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இதுதொடர்பான, விழிப்புணர்வு பேனர், மலையடிவாரத்தில் வைக்கப்பட உள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.