/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உரிமை பட்டா! பயிர் சாகுபடி செய்யும் பழங்குடியினர்
/
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உரிமை பட்டா! பயிர் சாகுபடி செய்யும் பழங்குடியினர்
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உரிமை பட்டா! பயிர் சாகுபடி செய்யும் பழங்குடியினர்
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உரிமை பட்டா! பயிர் சாகுபடி செய்யும் பழங்குடியினர்
ADDED : அக் 29, 2025 11:47 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட செட்டில்மென்ட் பகுதிகளில் பழங்குடியினரின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில், படிப்படியாக அனைவருக்கும் வன உரிமைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட, ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோழிகமுத்தி, எருமைப்பாறை, கூமாட்டி, நாகரூத்து - 1, நாகரூத் - 2, சின்னார்பதி, பழைய சர்க்கார்பதி, நெடுங்குன்று, வெள்ளிமுடி, கவர்க்கல், சின்கோனா, காடம்பாறை, கீழ்பூனாஞ்சி, பாலகணார், பரமன்கடவு, உடுமன்பாறை, கல்லார்குடி தெப்பக்குலமேடு, சங்கரான்குடி என, 18 பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
இங்குள்ள மக்கள், தங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக, தனிநபர் வனஅனுபவ உரிமை சட்டத்தின் கீழ், வேளாண், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இதுதவிர, சமூக வனஅனுபவ உரிமை சட்டத்தின் கீழ், சிறுவனப் பொருட்கள் சேகரம் செய்தும் வருகின்றனர். குறிப்பாக, செடி, கட்டை, குச்சி, தேன், பட்டுக்கூடு, மருத்துவ தாவரம், மூங்கில், சீமாறு, கடுக்காய் போன்றவற்றை வீட்டு பயன்பாடு மற்றும் விற்பனைக்காக, அவர்கள் வனத்தில் சேகரித்துக் கொள்கின்றனர்.
அவ்வகையில், கடந்த, 2017ம் ஆண்டு முதல், 18 செட்டில்மென்ட்களில், 595 பேருக்கு, அனுபவ உரிமை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, பழைய நாகரூத்து நீங்கலாக, 17 செட்டில்மென்ட் பகுதி மக்களுக்கு, சமூக வன அனுபவ உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது, புதிதாக, எருமைப்பாறையில் - 19, நெடுங்குன்று - 2, வெள்ளிமுடி - 4 என, 25 பேருக்கு புதிதாக தனிநபர் வன உரிமை பட்டா வழங்கப்படவும் உள்ளது.
இது குறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் கூறியதாவது:
வனத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்கான உரிமையை அதிகாரப்பூர்வமாக வழங்கும் வகையில், வன உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வனத்தில் வாழ்பவர்கள், 75 ஆண்டுகளாக வனத்தில் வாழும் மற்ற பிரிவினர்களும் உரிமை கொள்ளலாம். வனப்பாதுகாப்பு பொறுப்பையும் இந்த சட்டம் வழங்குகிறது.
அதன்படி, ஆனைமலை புலிகள் காப்பகத்தில், எருமைப்பாறை, நெடுங்குன்று, வெள்ளிமுடி செட்டில்மென்ட்களில் உள்ள, 25 பழங்குடியினருக்கு புதிதாக தனிநபர் வன அனுபவ உரிமை பட்டா வழங்க, வனத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்தவுடன் அதற்கான ஒப்புதல் கடிதம், சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் வழங்கப்படும். பட்டியலில் விடுபட்டவர்கள் கோரினால், அவர்களுக்கும் தனிநபர் பட்டா உரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வன உரிமைப்பட்டா பெற்றவர்கள், ஒதுக்கப்படும் இடத்தில் காய்கறி, கீரை வகைகள் சாகுபடி செய்கின்றனர். அவற்றை அறுவடை செய்து விற்பதன் வாயிலாக கிடைக்கும் பணத்தை கொண்டு வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்கின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

