/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிக்கடி மின்தடை; கடும் வெயிலால் மக்கள் அவதி
/
அடிக்கடி மின்தடை; கடும் வெயிலால் மக்கள் அவதி
ADDED : பிப் 27, 2024 11:18 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கிராமப்புறங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், கடும் வெயிலால் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இரவு நேரத்திலும் உஷ்ணம் காரணமாக புழுக்கமாக உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வடக்கிப்பாளையம், நடுப்புணி, மாப்பிள்ளைக்கவுண்டன்புதுார் உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில், மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
வடக்கிப்பாளையம், புரவிபாளையம், கோவிந்தனுார், சேர்வகாரன்பாளையம், குமாரபாளையம், மாப்பிள்ளைக்கவுண்டன்புதுார், எஸ்.நாகூர், நடுப்புணி உள்ளிட்ட கிராமங்களில், நள்ளிரவில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது.
ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என மின்தடை செய்வதால், இரவு நேரத்தில் வீட்டில் நிம்மதியாக துாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதேபோன்று, விவசாய பணிகளுக்கு இரவில் போர்வெல் கம்பர்சர் ஓட்டும் பணிகளும் பாதிக்கிறது.
ஒரு நாளுக்கு ஆறு மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், வெயில் காலம் என்பதால், தென்னை மட்டை விழுந்து டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்படுகிறது, என ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி சமாளிக்கின்றனர்.
நகரப்பகுதியிலும், மற்ற கிராம பகுதிகளும் இதுபோன்று மின்தடை ஏற்படுவதில்லை. வடக்கிபாளையம் - நடுப்புணி வழித்தட கிராமங்களில் மக்கள் பற்றி கவலைப்படாமல் மின் தடை செய்கின்றனர். இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். விவசாய பணிகளும் பாதிக்கிறது.
கிராமங்களில் உள்ளவர்களின் நிலையை உணர்ந்து மின்தடை பிரச்னைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

