/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்திபுரம் வெளியூர் பஸ் ஸ்டாண்ட்
/
காந்திபுரம் வெளியூர் பஸ் ஸ்டாண்ட்
ADDED : நவ 04, 2025 12:16 AM

கோவை: கோவை காந்திபுரம் வெளியூர் பஸ் ஸ்டாண்ட், நவீன வசதிகளுடன் விரைவில் புதுப்பிக்கப்படஉள்ளது.
கோவையில் உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லுார் என ஏழு இடங்களில் பஸ் ஸ்டாண்ட்கள் உள்ளன. உக்கடம் பஸ் ஸ்டாண்ட் சீரமைக்கப்படும் பணி, சமீபத்தில் துவக்கப்பட்டது.
காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், 1974ல் கட்டப்பட்டது. 51 ஆண்டுகளாகி விட்டன. மேற்கூரைகள் பழுதாகி, கான்கிரீட் கலவை இடிந்து விழுகின்றன. மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகுகிறது. மழை நீர் வடிந்து செல்ல, போதிய வடிகால் வசதி இல்லை. பயணிகளுக்கு போதுமான இருக்கை வசதி இல்லை.
நவீன வசதிகளுடன் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என இரண்டு தளங்களுடன் புதுப்பிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த பஸ் ஸ்டாண்ட்டுக்கு தற்போது நாளொன்றுக்கு 998 பஸ்கள் வந்து செல்கின்றன.
தோராயமாக, 1.2 லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். வெளியூர் மக்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக, உள்ளூர் திட்ட குழும நிதியில் ரூ.30 கோடியில் புதுப்பிக்க முடிவெடுத்து, தமிழக அரசின் நிர்வாக அனுமதி கேட்டு, மாநகராட்சியில் இருந்து கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.
பஸ் ஸ்டாண்ட் பரப்பளவு குறுகியதாக இருப்பதால், சென்னை ஐ.ஐ.டி., (இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) குழுவினர் வரவழைக்கப்பட்டு, நிலத்தின் தன்மை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அவர்கள் கொடுத்த அறிக்கைக்கேற்ப நில அளவியல், தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் கட்டட வடிவமைப்பு, இறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் திட்ட அறிக்கை, தமிழக அரசின் நிர்வாக அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதித்துறைக்கு கோப்பு சென்றிருக்கிறது. அனுமதியளித்து அரசாணை வெளியிட்டதும் டெண்டர் கோரப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

