/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டன
/
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டன
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டன
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டன
ADDED : நவ 04, 2025 12:17 AM

கோவையில் கல்லுாரி மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை, மக்களை பதற வைத்துள்ளது. இது குறித்து, அவர்கள் சிலரிடம் பேசிய போது, காவல் துறை என்று ஒரு துறை உள்ளதா, ரோந்து கண்காணிப் பெல்லாம் என்னவானது, போதை நபர்களை யார்தான் கட்டுப்படுத்துவது என்று, சரமாரியாக கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.
பெண்கள் பத்திரம் இன்று இளைஞர்கள், 'போதை' எனும் தவறான பாதையில் செல்கின்றனர். போதையில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து விட்டன. பெண்கள் தனியே செல்ல முடிவதில்லை. பெண்கள் எச்சரிக்கையுடனும், உஷாராகவும் இருக்க வேண்டிய காலகட்டம் இது. -மனோஜ் கோவில்பாளையம்
குழந்தைகளுக்கும் தொல்லை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த அதே கொடூரம், இப்போது கோவை மாணவிக்கும் நடந்துள்ளது. பள்ளி குழந்தைகளும், பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாது என்ற நிலை, இன்றைக்கு உள்ளது. இது போன்ற கயவர்களை, கடுமையாக தண்டிக்க வேண்டும். - ரேவதி கோவில்பாளையம்
பாதுகாப்பில்லை தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதை பொருட்கள்கட்டுப்பாடு இல்லாமல் விற்கப்படுகின்றன. இதுவே இளைஞர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட காரணம். கடுமையான நடவடிக்கை எடுக்க தவறினால், இது போன்ற குற்றங்கள் தொடர் கதையாகிவிடும். - ---ஜாஸ்மின் ராஜேந்திரன் சிங்காநல்லுார்
கூடுதல் கவனம் தேவை பெரும்பாலான குற்றங்களில் பாதிக்கப்படுவது பெண்கள் தான். பெண்கள் இன்னும் கவனமாக தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளும் போது, பெண்களை பாதுகாப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற குற்றங்கள் இனியும் நடக்காமல் தடுக்க வேண்டும். - அனிதா சந்தனசாமி கோவை
பயம் தொற்றிக்கொள்கிறது தவறு செய்பவர்களுக்கு, காவல்துறை, தண்டனை மீதான பயம் குறைந்து விட்டது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. தவறு செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த சமுதாயம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது, பயம் தொற்றிக் கொள்கிறது. - அனந்த பார்த்திபன் கோவை
ரோந்து அதிகரிக்கணும் இளைஞர்களிடம் மோசமாக பரவி இருக்கிற போதை கலாசாரம், எந்த எல்லைக்கும் கொண்டு போய் நிறுத்துகிறது. பெற்றோர் கண்காணித்து, சரியான அறிவுரை வழங்கி வழிநடத்தவில்லை என்றால், இதுபோன்ற அவலங்கள் நடக்க, அதுவும் ஒரு காரணமாகி விடும். போலீசார் இரவில் ரோந்து செல்வதை அதிகரிக்க வேண்டும். - லட்சுமி காந்தன் கோவை
தண்டனைகள் கடுமையாகணும் தற்போது நடந்து கொண்டிருக்கும் தி.மு.க. ஆட்சியில், பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம், ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர், பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு, தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும். - கவுசல்யா கோவை
தவறு செய்ய துாண்டுதல்கள் தவறு செய்ய துாண்டுவதற்கான வழிகள் இன்று அதிகரித்து விட்டன. மொபைல் போனில் உள்ள பல செயலிகள், பாதையை மாற்றுகின்றன. போதைப் பொருட்களின் புழக்கமும் அதிகரித்து விட்டது. இதுபோன்ற காரணங்கள், தவறு செய்ய துாண்டுகிறது. போதை பொருள் புழக்கத்தையும், வேண்டாத செயலிகளையும், தடை செய்ய வேண்டும். -- சரளாதேவி கோவை

