/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுசிகா நதி பள்ளத்தில் குவியும் குப்பை
/
கவுசிகா நதி பள்ளத்தில் குவியும் குப்பை
ADDED : நவ 12, 2025 10:56 PM

கோவில்பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே குருடி மலையில் துவங்கி, பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ். குளம், அன்னூர், சூலூர் ஒன்றியங்கள் வழியாக கவுசிகா நதி பாதை செல்கிறது. தற்போது இதில் மழைக்காலங்களில் மட்டும் நீரோட்டம் உள்ளது. இந்நிலையில் கவுசிகா நீர்க்கரங்கள் அமைப்பும், கோயம்புத்தூர் மான்செஸ்டர் ரோட்டரி சங்கமும் இணைந்து, வையம்பாளையம் முதல் பச்சாபாளையம் வரை 6 கி. மீ., தொலைவிற்கு புனரமைக்கும் பணியை துவக்கி உள்ளன. கடந்த இரு வாரங்களாக கோவில்பாளையத்தில் பெரிய பாலத்தின் கீழே சீமை கருவேல மரங்கள், புதர்கள், குப்பைகள் ஆகியவற்றை அகற்றி உள்ளனர். மழைநீர் செல்லும் பாதையை சீரமைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மர்ம நபர்கள் இரவு நேரத்தில் லோடு கணக்கில் பல்வேறு கழிவுகளை கவுசிகா நதி பள்ளத்தில் கொட்டி விட்டு சென்றுள்ளனர். காலையில் புனரமைப்பு பணிக்காக வந்த தன்னார்வலர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,' பல லட்சம் மக்களின் விருப்பம் கவுசிகா நதியை மீட்டெடுப்பது தான். அதற்காக பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்போடு புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்கு இடையூறாக லோடு கணக்கில் குப்பை கொட்டப்படுகிறது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து குப்பை கொட்டுவோரை கண்டறிந்து, தடை செய்து, உரிய நடவடிக்கை எடுத்து புனரமைப்பு பணிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்,' என்றனர்.

