ADDED : அக் 29, 2025 12:28 AM

அன்னுார்: அன்னுாரில், மேட்டுப்பாளையம் சாலையில், பெரிய பாலத்தை ஒட்டி உள்ள டிரான்ஸ்பார்மர் முன் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அன்னுார் பேரூராட்சி மற்றும் ஒட்டர்பாளையம் ஊராட்சி பகுதிகளில் இருந்து தினமும் மூட்டை மூட்டையாக இறைச்சி கழிவு உள்ளிட்ட கழிவுகளை இங்கு கொட்டுகின்றனர். இவற்றை உடனே அப்புறப்படுத்துவதில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது : இங்கு கருப்பராயன் கோவில் மற்றும் நவீன மின் மயானம் உள்ளது. வங்கி, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், தனியார் திருமண மண்டபம் ஆகியவை உள்ளன.
ஆனாலும் இங்கு ஏராளமான அழுகிய குப்பைகளை இறைச்சிகளோடு கொட்டுகின்றனர். கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஈக்கள் அதிகரித்துவிட்டன.
இதுகுறித்து அன்னுார் பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஒட்டர்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. சிலர் இந்த குப்பைகளுக்கு தீ வைக்கின்றனர். டிரான்ஸ்பார்மரை ஒட்டி தீயெறிவதால் பெரும் விபரீதம் நடக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக இங்கு குப்பை கொட்டுவதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

