/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடைகளுக்கு பட்டி பொங்கல் வைத்து... நன்றி செலுத்துவோம்! பண்டிகை கொண்டாட விவசாயிகள் ஆயத்தம்
/
கால்நடைகளுக்கு பட்டி பொங்கல் வைத்து... நன்றி செலுத்துவோம்! பண்டிகை கொண்டாட விவசாயிகள் ஆயத்தம்
கால்நடைகளுக்கு பட்டி பொங்கல் வைத்து... நன்றி செலுத்துவோம்! பண்டிகை கொண்டாட விவசாயிகள் ஆயத்தம்
கால்நடைகளுக்கு பட்டி பொங்கல் வைத்து... நன்றி செலுத்துவோம்! பண்டிகை கொண்டாட விவசாயிகள் ஆயத்தம்
ADDED : ஜன 15, 2024 10:08 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் உழவுக்கு உறுதுணையாக, வீட்டில் ஒரு குழந்தை போல வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும், 'பட்டி பொங்கல்' விழா இன்று நடக்கிறது. இதற்காக, விவசாயிகள், தோட்டங்களில் பட்டி அமைக்கும் பணிகளில் நேற்று ஈடுபட்டனர்.
விவசாய தேவைக்கு மட்டுமின்றி, பால் உற்பத்திக்கும் விவசாயிகள் மாடுகள் வளர்க்கின்றனர். ஒவ்வொரு வீடுகளிலும், மாடுகள் வளர்ப்பது ஒரு கவுரவமாகவே கருதப்படுகிறது.
மண்ணின் வளம், தட்ப வெப்பம், அங்கு விளையும் தீவனங்கள் இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற நாட்டு இன மாடுகளை, முன்னோர்கள் வகைப்படுத்தினர்.
அந்தந்த மாடுகள் வளரும் பகுதிகளை வைத்தே, காங்கேயம், மணப்பாறை, உம்பளாச்சேரி, புளியகுளம்பட்டி மாடு, தேனி மலை மாடு, பர்கூர் மலை மாடு என பல்வேறு பெயர்கள் வைத்து அழைக்கப்பட்டன. ஏர் உழவு, விளை பொருட்களை எடுத்துச் செல்லவும், ரேக்ளா போட்டிகளில் பங்கேற்கவும் காளை மாடுகள் வளர்க்கப்படுகின்றன.
விவசாயிகளின் உற்ற நண்பனாக நினைக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக வாழையடி வாழையாக இன்று வரை, 'பட்டி பொங்கல்' பாரம்பரியம் மாறாமல் கொண்டாடப்படுகிறது.
இரண்டாவது பொங்கல்
தை 1ம் தேதி விநாயகருக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்யும் மக்கள், தை 2ம் தேதி, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, இரண்டாம் பொங்கலாக, 'பட்டி பொங்கல்' வைத்து கொண்டாடுகின்றனர்.
மனித குலத்துக்காக உழைக்கும் மாடுகளை, ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று, குழந்தையை போன்று பாவித்து குளிப்பாட்டி, கொம்புகளில் வண்ணங்கள் பூசி, சலங்கை, காதோலை, கருகமணி என ஆபரணங்கள் அணிவித்து அழகுப்படுத்துகின்றனர்.
தோட்டங்களில், 'பட்டி' அமைத்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. 'வாங்க பட்டி யாரே' என மாடுகளை அழைத்து பாடல்களை பாடி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். உறவுகள், நண்பர்களை அழைத்து இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடுகின்றனர் விவசாயிகள்.
இந்தாண்டு, பட்டி பொங்கல் கொண்டாட விவசாயிகள் தயராகி வருகின்றனர். மாடுகளை தயார்படுத்தவும், பட்டி அமைக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், கிராமங்கள் களைகட்டியுள்ளன.
வாழையடி வாழையாக...
விவசாயிகள் கூறியதாவது: விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை, குழந்தைகளை போல பாவித்து வளர்க்கிறோம்.
ஆண்டு முழுவதும் எங்களுடன் இணைந்து உழைக்கும் இந்த மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, வாழையடி வாழையாக, 'பட்டி பொங்கல்' விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
கால மாற்றத்தில் இன்னும் மறையாமல் கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் உள்ளது. கலாசாரம், பண்பாடு, பழங்கால கலைகளை பாதுகாக்க இந்த பண்டிகை பாலமாக உள்ளது. அதிலும், பட்டி பொங்கல் முன்னோர்கள் காலத்தில் கொண்டாடியது போன்று இன்றும் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
கால்நடைகளுக்கு எவ்வித நோயுமின்றி ஆரோக்கியமாக இருக்கவும், விவசாயம் செழிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன், பண்டிகையை கொண்டாட தயாராகியுள்ளோம்.
இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.