/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொடலூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
கொடலூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : மே 28, 2025 11:41 PM

மேட்டுப்பாளையம்; கொடலூர் மாரியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில், கொடலூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 26ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் இருந்து, கோபுர கலசங்களும், முளைப்பாரிகை, தீர்க்கக்குடங்கள் ஆகியவை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
கோவிலில் கோபுரத்தில் கலசங்கள் வைத்தும், பரிவார் தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்தும் சாத்தப்பட்டன. நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு யாக வேள்வி பூஜைகள் முடிந்த பின், நாடி சந்தானம், யாகசாலையில் இருந்து, மூலவர் சுவாமிக்கு, அருள் சக்தி ஏற்றுதல் ஆகிய பூஜைகள் நடந்தன. காலை, 6:15 மணிக்கு தீர்த்த கலசங்களை, யாக சாலையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று, கோபுர கலசங்களுக்கும், பரிவார் தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
காரமடை அஸ்வின் சிவாச்சாரியார் தலைமையில், 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாக வேள்வி பூஜைகளையும், கும்பாபிஷேகத்தையும் நடத்தினர். விழா ஏற்பாடுகளை ஆலய திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.