/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்பாளையத்தில் ரயில்வே ஸ்டேஷன் விரைவில் நல்ல சேதி! தெற்கு ரயில்வே ஒப்புதலுக்கு காத்திருப்பு
/
கோவில்பாளையத்தில் ரயில்வே ஸ்டேஷன் விரைவில் நல்ல சேதி! தெற்கு ரயில்வே ஒப்புதலுக்கு காத்திருப்பு
கோவில்பாளையத்தில் ரயில்வே ஸ்டேஷன் விரைவில் நல்ல சேதி! தெற்கு ரயில்வே ஒப்புதலுக்கு காத்திருப்பு
கோவில்பாளையத்தில் ரயில்வே ஸ்டேஷன் விரைவில் நல்ல சேதி! தெற்கு ரயில்வே ஒப்புதலுக்கு காத்திருப்பு
ADDED : அக் 14, 2025 12:22 AM

பொள்ளாச்சி:கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் அமைக்கும் முன்மொழிவு, தெற்கு ரயில்வே தலைமையக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது,' என, பாலக்காடு ரயில்வே அதிகாரிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளனர்.
பொள்ளாச்சி - கிணத்துக்கடவு ரயில் வழித்தடத்தில், 1914ம் ஆண்டு கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. மீட்டர்கேஜ் காலத்தில் மூடப்பட்ட இந்த ரயில்வே ஸ்டேஷனை திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவும் இருந்தது. தற்போது, பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. கோவில்பாளையம் தொழில் மையமாக மாறியுள்ளது.
கோவை - பொள்ளாச்சி இடையே மூன்று ரயில்கள் இயங்குகின்றன. எதிர்காலத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் மீண்டும் கட்டப்பட்டு குறைந்தபட்சம் ஒரு நிமிட நிறுத்தம் அளிக்கப்பட்டால், பொதுமக்கள், பயணியர் மற்றும் ரயில்வே துறைக்கும் மிகப்பெரிய நன்மை கிடைக்கும் என கூறப்படுகிறது.
பொள்ளாச்சி - போத்தனுார் இடையே, 40 கி.மீ., துாரத்தில் கிணத்துக்கடவு மட்டுமே ஒரே இடைநிலை நிலையமாக செயல்படுகிறது. ஆனால், பொள்ளாச்சி - பாலக்காடு வரை 54 கி.மீ., துாரத்தில் செயல்பட்ட ஆறு ஸ்டேஷன்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி - போத்தனுார் வழித்தடத்தில் கிணத்துக்கடவை தவிர எந்த ஸ்டேஷனும் திறக்கவில்லை.
பொள்ளாச்சியில் இருந்து, 10 கி.மீ.,ல் அமைந்துள்ள கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தின் செயலாளர் கிருஷ்ணபாலாஜி, தகவல் அறியும் சட்டத்தின் கீழ், கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் அமைவது குறித்து கேள்வி கேட்டார்.
அதற்கு, கோவில்பாளையம் ஸ்டேஷன் அமைப்பது குறித்து தெற்கு ரயில்வே தலைமையக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்க செயலாளர் கூறியதாவது:
பொள்ளாச்சி சந்திப்பு, கோவை சந்திப்புக்கு இடையில், பாலக்காடு பிரிவில் உள்ள தெற்கு ரயில்வேயின் கோவில்பாளையம் நிலையம் தொடர்பான, நிலைய வகை, கடக்கும் ரயில் நிலையம், நிறுத்தம், மொத்த மதிப்பீடு உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டது.
அதற்கு, பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரிகள், 'கி.மீ. 133.07ல் பொள்ளாச்சி சந்திப்பு நிலையம், கிணத்துக்கடவு நிலையத்துக்கு இடையில் கோவில்பாளையம் புதிய கடக்கும் ரயில் நிலையம் அமைக்கும் திட்டம் உள்ளது.
இதில், 730 மீட்டர் நீளம் உள்ள இரண்டு உயர் தர மேடைகள், மேல் சந்திப்பு பாலம் அடங்கும். இது, 2025 - 26ம் ஆண்டுக்கான பணித்திட்டத்தில், போக்குவரத்து வசதிகள் தலைப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது,' என பதில் அளித்துள்ளனர்.
கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் அமைப்பது குறித்து ரயில்வே அமைச்சகம், ரயில்வே வாரியம், தெற்கு ரயில்வே தலைமையகம் ஒப்புதல் பெற்றதா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, கோவில்பாளையத்தில் புதிய கடக்கும் ரயில் நிலையம் அமைக்கும் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. இது தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது,' என பதிலளிக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் ரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.