/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீன் மார்க்கெட்டை திறக்க 'கிரீன் சிக்னல்'; 25 சதவீத நிலுவை வாடகை செலுத்தியதால் அனுமதி
/
மீன் மார்க்கெட்டை திறக்க 'கிரீன் சிக்னல்'; 25 சதவீத நிலுவை வாடகை செலுத்தியதால் அனுமதி
மீன் மார்க்கெட்டை திறக்க 'கிரீன் சிக்னல்'; 25 சதவீத நிலுவை வாடகை செலுத்தியதால் அனுமதி
மீன் மார்க்கெட்டை திறக்க 'கிரீன் சிக்னல்'; 25 சதவீத நிலுவை வாடகை செலுத்தியதால் அனுமதி
ADDED : ஜன 08, 2025 11:37 PM

கோவை; உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட் வியாபாரிகள், நிலுவை வாடகையில், 25 சதவீதம் செலுத்தியதால், புது மார்க்கெட்டை நிபந்தனையுடன் திறக்க, மாநகராட்சி அனுமதி அளித்திருக்கிறது.
உக்கடம் - பேரூர் ரோட்டில் சில்லறை மீன் மார்க்கெட் செயல்படுகிறது; 72 கடைகள் உள்ளன. துாய்மை பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டுவதற்காக, மார்க்கெட்டை இடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மீன் வியாபாரிகளுக்கு, புல்லுக்காடு மைதானத்தில் வழங்கப்பட்ட மாற்று இடத்தில், வியாபாரிகள் புதிதாக மார்க்கெட் கட்டினர். 4.20 கோடி ரூபாய் வாடகை நிலுவை இருப்பதால், புது மார்க்கெட் திறப்பதில் சிக்கல் எழுந்தது.
மூடிக்கிடக்கும், 21 கடைகளை தவிர்த்து, மீதமுள்ள 51 கடை வியாபாரிகளிடம் நிலுவை வாடகை வசூலித்த பின், கடைகள் ஒதுக்க அரசு அறிவுறுத்தியது. 2024 நவ., 30 வரை நிலுவை வாடகை கணக்கிட வேண்டும். கடைகள் ஒப்படைக்கும் மாதத்துக்கு முன் மாதம் வரை நிலுவை வசூலிக்க நிபந்தனை விதிக்கப்பட்டது. 21 கடைகளுக்கு நிலுவை வாடகை மற்றும் அபராதம் செலுத்தாவிட்டால், 51 கடைகள் மட்டும் ஒதுக்கலாம் என கூறப்பட்டது.
கடுமையான நிபந்தனைகளால் அதிர்ச்சியடைந்த மீன் வியாபாரிகள், தளர்வு கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் முறையிட்டனர். நிலுவை வாடகை தவிர்த்து, தமிழக அரசின் ஒப்புதலுக்கு மாநகராட்சி கருத்துரு அனுப்பியது; பதில் வரவில்லை.
இதற்கிடையே, நிலுவை வாடகையில், 25 சதவீதம் செலுத்த வேண்டும்; மீதமுள்ள தொகையை ஓராண்டுக்குள் செலுத்த வேண்டுமென்கிற நிபந்தனையோடு, புது மீன் மார்க்கெட்டை திறக்க, மாநகராட்சி அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி, முதல்கட்டமாக, மீன் வியாபாரிகள் தரப்பில், 17 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''25 சதவீத நிலுவை போக, மீதமுள்ள தொகையை ஓராண்டுக்குள் செலுத்த அவகாசம் வழங்கியுள்ளோம்.
துாய்மை பணியாளர்களுக்கு வீடு கட்ட வேண்டியுள்ளதால், மார்க்கெட்டை மாற்ற வேண்டியுள்ளது. தள்ளுபடி செய்வது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம்; தள்ளுபடி செய்யாவிட்டால், மீதமுள்ள தொகையில் உள்ள நிலுவையை செலுத்த அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார்.