சின்னவேடம்பட்டி பொதுமக்கள் மகிழ்ச்சி! சுத்திகரிப்பு நிலைய பணி நிறுத்தம்
சின்னவேடம்பட்டி பொதுமக்கள் மகிழ்ச்சி! சுத்திகரிப்பு நிலைய பணி நிறுத்தம்
UPDATED : ஜூலை 30, 2026 07:36 AM
ADDED : ஜூலை 29, 2026 07:30 PM

சரவணம்பட்டி: சின்னவேடம்பட்டி ஏரி அருகே மாநகராட்சி கட்டி வந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வேலைகள், இப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
சின்னவேடம்பட்டி ஏரி அருகே மாநகராட்சி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து வருகிறது. அதற்கு சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு மேம்பாட்டு குழு, கவுசிகா நதிநீர் பாதுகாப்பு அமைப்பு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி பகுதியில் உள்ள குடியிருப்பு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாநகராட்சியில் நேற்று முன் தினம் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், 200 பேர் கமிஷனரை சந்தித்து இது தொடர்பாக பேசினர்.
கமிஷனர் ரவி தேஜா, ஏரி பகுதியை பார்வையிட்டு முடிவு எடுக்கலாம் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
சொன்னபடி நேற்று அவர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் இடத்தை பார்வையிட்டார்.
பின்னர், சின்னவேடம்பட்டி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களையும், போராட்ட அமைப்பினரையும் சந்தித்து பேசினார்.
பங்கேற்ற அனைவரும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நன்னீர் உள்ள ஏரி அருகே கட்டினால் எதிர்காலத்தில் ஏரியில் கழிவுநீர் கலக்க வாய்ப்பு ஏற்படும்; கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.
அதற்கு மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா, ''மாற்று இடத்தை தேர்வு செய்து, அங்கு கழிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடியுமா, அங்கு சுத்திகரிப்பு நிலையத்தை மாற்ற முடியுமா என பார்க்கிறேன். அதுவரை, இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் வேலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்,” என உறுதியளித்தார்.
கமிஷனரின் இந்த அறிவிப்பு, இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், ஏரி பாதுகாப்பு குழுவினர், குடியிருப்போர் சங்கத்தினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
