/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோழிப்பண்ணைகளுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை
/
கோழிப்பண்ணைகளுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை
ADDED : டிச 17, 2024 11:30 PM
சூலுார்; 'சுகாதாரமற்ற நிலையில் செயல்படும் கோழிப்பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என, சுல்தான்பேட்டை வட்டார சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
சுல்தான்பேட்டை வட்டாரத்தில் அப்பநாயக்கன்பட்டி, செலக்கரச்சல், அய்யம்பாளையம், திம்மநாயக்கன் பாளையம், செஞ்சேரிமலை, வதம்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கறிக்கோழி பண்ணைகள் செயல்படுகின்றன. ஒரு சில கோழிப்பண்ணைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவதில்லை, என்ற புகார்கள் எழுந்தன.
பண்ணைகளில் உற்பத்தி ஆகும் ஈக்கள், குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாகவும், கழிவுகளை பொது வெளியில் கொட்டுவதால், மழைக்காலங்களில் பல்வேறு நோய்கள் உண்டாவதாகவும், மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், சுகாதார துறை அலுவலர்கள், கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர்.
பண்ணைகளை துாய்மையான முறையில் பராமரிக்க வேண்டும். இறந்த கோழிகளை பொது வெளியில் வீசுவதோ, நீர் நிலைகளில் கொட்டுவதோ கூடாது. ஆழமான குழிகளை தோண்டி, அதில் இறந்த கோழிகள், கழிவுகளை போட்டு, கிருமி நாசினி தெளித்து நன்றாக மூட வேண்டும். எக்காரணம் கொண்டும் செத்த கோழிகளை விற்க கூடாது. அதிகாரிகள் ஆய்வின் போது, முறையாக பராமாரிக்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டால், பண்ணையின் உரிமம் ரத்து செய்யப்படும்,'' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.