/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிரப்பள்ளி மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை: கொச்சிக்கு டீ துாள் கொண்டு செல்வது பாதிப்பு
/
அதிரப்பள்ளி மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை: கொச்சிக்கு டீ துாள் கொண்டு செல்வது பாதிப்பு
அதிரப்பள்ளி மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை: கொச்சிக்கு டீ துாள் கொண்டு செல்வது பாதிப்பு
அதிரப்பள்ளி மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை: கொச்சிக்கு டீ துாள் கொண்டு செல்வது பாதிப்பு
ADDED : அக் 29, 2025 11:42 PM

வால்பாறை: வால்பாறை - அதிரபள்ளி ரோட்டில் தடுப்புச்சுவர் சேதமடைந்ததால், கனரக வாகனங்கள் செல்ல கேரள மாநில அரசு தடை விதித்துள்ளது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி அருவி அமைந்துள்ளதால், சுற்றுலா பயணியர் அதிகளவில் இங்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறையில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலை துாள், சாலக்குடி அருகில் உள்ள கொச்சி ஏல மையத்திற்கு லாரிகள் வாயிலாக நாள் தோறும் இவ்வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி செல்லும் ரோட்டில் பந்தடிப்பாலம் என்ற இடத்தில் ரோட்டின் தடுப்புச்சுவர் இடிந்து, மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், கனரக வாகனங்கள் செல்ல கேரள நெடுஞ்சாலைத்துறை தடை விதித்துள்ளது. இதனால் வால்பாறையிலிருந்து சாலக்குடிக்கு டீ துாள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி செல்லும் ரோட்டில் தடுப்புச்சுவர் இடிந்துள்ளதால், கனரக வாகனங்கள் செல்ல போதிய பாதுகாப்பில்லை. ஆனால், அரசு பஸ், சுற்றுலா வாகனங்கள் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடுப்புச்சுவர் கட்டும் பணி தற்போது நடக்கிறது. பணி முடிந்த பின் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.
வால்பாறை லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:
வால்பாறை -- சாலக்குடி ரோட்டில் தடுப்புச்சுவர் சேதமடைந்ததால், கேரள மாநிலம் கொச்சி ஏல மையத்துக்கு டீ துாள் கொண்டு செல்ல முடியவில்லை. வால்பாறை சின்கோனா 'டான்டீ' மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் (10 தொழிற்சாலைகள்) இருந்து, நாள் தோறும், 100 டன் டீ துாள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது, சாலக்குடி மலைப்பாதை சேதமடைந்துள்ளதால், பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக கொச்சி செல்ல வேண்டியுள்ளது. இதனால், 100 கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், டீசல் செலவு மற்றும் பயண நேரம் அதிகமாகிறது.
இவ்வாறு, கூறினர்.

