/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நம்மூருக்கு சிறுவாணி குடிநீர் பாய்ந்து வந்த வரலாறு இதோ!
/
நம்மூருக்கு சிறுவாணி குடிநீர் பாய்ந்து வந்த வரலாறு இதோ!
நம்மூருக்கு சிறுவாணி குடிநீர் பாய்ந்து வந்த வரலாறு இதோ!
நம்மூருக்கு சிறுவாணி குடிநீர் பாய்ந்து வந்த வரலாறு இதோ!
ADDED : நவ 23, 2025 06:31 AM
கோ வைக்கு சென்றால், சிறுவாணி தண்ணீரை சுவைக்கலாம் என, வெளியூர்காரர்கள் கூறுவதுண்டு. கேரளாவில் இருந்து இந்த, சுவையான தண்ணீர் நம் ஊருக்கு வருவதன் பின்னணியில், ஒரு மனிதனின் கனவு, ஒரு நகரத்தின் போராட்டம், ஒரு நுாற்றாண்டை கடந்த பயணம் இருப்பதை, இன்றைய தலைமுறை பெரும்பாலும் அறியாது.
1889ம் ஆண்டு, கோவைக்கான சுத்தமான குடிநீரை, கனவில் கண்டவர் நரசிம்மலு நாயுடு. இவர் உருவாக்கிய சிறுவாணித் திட்ட வரைவை, நகர சபை 33 ஆண்டுகள் பொருட்படுத்தவே இல்லை. குறைந்த செலவில் ஏதேனும் செய்யலாம் என்ற, எண்ணத்தில் திட்டத்தை ஒத்திவைத்தது.
ஆனால், விஷக்காய்ச்சல் பரவி பயமுறுத்தியபோது, சுத்தமான குடிநீர் இல்லாமல் நகரம் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை, நகர சபை புரிந்து கொண்டது. அதனால், 1922ல் இறுதியாக சிறுவாணி திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தது.
சிறுவாணி… இரண்டு மலைத் தொடர்களுக்கிடையே ஓடும் சுத்தமான சிற்றாறு. மலை, மழையால் எப்போதும் வற்றாத நீர். வழியில் பொரத்தி மலை. அந்த மலைக்குள் 1.6 கி.மீ., நீளம் ஒரு துவாரம் தோண்டி, அதன் அருகே அணை கட்டி, தேக்கப்பட்ட நீரை ஆனையாற்றில் ஓடச்செய்து, அங்கிருந்து குழாய் வழியாக, 34 கி.மீ., துாரத்துக்கு நகரத்துக்கு கொண்டு வரும் அற்புத யோசனை.
செலவு? அந்நாளில் ரூ. 48 லட்சம். இன்று கணக்கிட முடியாத பெரும் தொகை.
வேலை நடந்துகொண்டிருக்கும்போது 1929ல் குடிநீர்ப்பஞ்சம் கோவை மக்களை கிளர்ச்சிக்கு தள்ளியது. அரசு அனுமதிக்க தாமதித்ததும், மக்களின் கோபம் அதிகமானது.
அப்போது ரத்தினசபாபதி முதலியார், சென்னை அரசையே நேரடியாக அணுகி, அனுமதி பெற்றதன் காரணமாக வேலை விரைவாக நடந்தது. கடைசியில் ஒரு வங்காளி ஒப்பந்ததாரர், மலையின் 390 அடித் துவாரப் பணியை ஓராண்டில் முடித்து திட்டத்தை நிறைவேற்றினார்.
முதன்முதலில் குழாயில் சிறுவாணி நீர் வந்த நாள், கோவை மக்களுக்கு அது ஒரு பண்டிகை. நகருக்கு வடக்கே வனக்கல்லூரி அருகே, உயரமான மேட்டு பகுதியில், ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டியும் கட்டப்பட்டது. அதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 1450 அடி.
அதனால், நீர், நகரம் முழுவதும் இயல்பாக பாய்ந்தது. அன்றைய கவர்னரின் பெயரால், 'கோஷன் பார்க்' என்று அழைக்கப்பட்ட அந்த இடம்தான், இப்போது 'பாரதி பார்க்' என அறியப்படுகிறது.

