/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகங்கள் பயிற்றுநர் பற்றாக்குறையால் முடங்கும் அவலம்
/
அரசு பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகங்கள் பயிற்றுநர் பற்றாக்குறையால் முடங்கும் அவலம்
அரசு பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகங்கள் பயிற்றுநர் பற்றாக்குறையால் முடங்கும் அவலம்
அரசு பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகங்கள் பயிற்றுநர் பற்றாக்குறையால் முடங்கும் அவலம்
ADDED : டிச 12, 2025 05:01 AM
கோவை: கோவையில் 291 அரசு பள்ளிகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்) அமைக்கப்பட்டும், போதிய பயிற்றுநர்கள் இல்லாததால் ஆய்வகங்கள் பயன்பாடின்றி முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்தும் வகையில், 2024-2025ம் கல்வியாண்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் 8,209 பள்ளிகளில் இந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் 291 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, 290 பள்ளிகளில் ஹைடெக் லேப்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பள்ளிக்கு 10 கணினிகள், புரொஜெக்டர் உள்ளிட்ட உபகரணங்களுடன், ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான மதிப்பீட்டில் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்தம் இந்த ஆய்வகங்களை அமைப்பது, அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பராமரிப்பது, மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தேவையான பயிற்றுநர்களை நியமிப்பது ஆகிய பொறுப்புகள் கேரளாவை சேர்ந்த 'கெல்ட்ரான்' எனும் தனியார் நிறுவனத்திடம் 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆய்வகங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை இயக்கவும், பயிற்சிகளை நடத்தவும் ஆட்கள் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. கோவையில் தற்போது வரை 90 பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதுகுறித்து கல்வித்துறையினர் கூறுகையில், ''ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் பயிற்றுநர்களுக்கு சம்பளத்தை சரிவர வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பணியில் சேருபவர்கள் குறுகிய காலத்திலேயே வேலையை விட்டு செல்கின்றனர். இதன் காரணமாகவே காலியிடங்கள் அதிகரித்து வருகின்றன,'' என்றனர்.

