/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே பாலம் பணி முடிக்க நெடுஞ்சாலைத்துறை உறுதி
/
ரயில்வே பாலம் பணி முடிக்க நெடுஞ்சாலைத்துறை உறுதி
ADDED : ஜூலை 30, 2025 09:25 PM

கோவை; ஒண்டிப்புதுாரில் இருந்து எஸ்.ஐ.எச்.எஸ்., காலனிக்கு செல்ல, 27 துாண்களுடன் ரயில்வே மேம்பாலம் கட்டும் திட்டம், 2010ல் அறிவிக்கப்பட்டது.
2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின், இரண்டு ஆண்டுகள் தாமதத்துக்கு பின், 2013ல் வேலை துவங்கியது. சர்வீஸ் ரோட்டுக்கு போதிய நிலம் கையகப்படுத்தாமல் துவக்கியதால், அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஐகோர்ட்டுக்கு சென்று, பணியை தடுத்து நிறுத்தினர். அதனால், அந்தரத்தில் பாலம் நின்றது.
2021ல் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் இக்கோப்பு துாசி தட்டப்பட்டது. 29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, நில உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி, இழப்பீடு வழங்கப்பட்டது.
கட்டுமான பணிக்காக மட்டும் கூடுதலாக, 8.8 கோடி ரூபாய் ஒதுக்கி, 2023ல் மீண்டும் வேலை துவக்கப்பட்டது. பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 2024 ஆக., மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது; ஓராண்டு ஆகப் போகிறது; இன்னும் பணிகள் இழுத்துக் கொண்டே செல்கிறது.
அதனால், அப்பணிகளை, சிங்காநல்லுார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் நேற்று பார்வையிட்டார். நெடுஞ்சாலைத்துறை (கிராம சாலைகள்) உதவி கோட்ட பொறியாளர் குருமூர்த்தி, இன்னும் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை விளக்கினார்.
சாய்வு தளம் அமைத்ததும் வர்ணம் பூசும் பணி துவங்கும். மேம்பாலத்தில் மின் விளக்குகள் பொருத்தப்படும்.
இறுதியாக, தார் சாலைகள் போடப்படும். ஆக., இறுதிக்குள் இவ்வேலைகளை முடிக்க இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

